மனோ மகன்கள் புதிய தலைமுறை
தமிழ்நாடு

மனோ மகன்கள் மீதான புகார்: வெளியான சிசிடிவி; வழக்கில் ஏற்பட்ட பகீர் திருப்பம்!

பாடகர் மனோவின் மகன்கள் இருவரை தாக்கியதாக கூறப்படும் விவகாரத்தில், திருப்பத்தை ஏற்படுத்தும் வகையிலான சிசிடிவி காட்சிகள் வெளியாகியிருக்கிறது.

PT WEB

செய்தியாளர்: நவீன் குமார்

பாடகர் மனோவின் மகன்கள் இருவரை தாக்கியதாக கூறப்படும் விவகாரத்தில், திருப்பத்தை ஏற்படுத்தும் வகையிலான சிசிடிவி காட்சிகள் வெளியாகியிருக்கிறது.

தன் மகன்கள் தாக்கப்பட்டதற்கு பின்னணியில் வேறு திட்டம் இருப்பதாக குற்றஞ்சாட்டியிருக்கிறார் மனோவின் மனைவி. கடந்த பத்தாம் தேதி இரவு சிறுவன் உள்ளிட்ட இருவரை, பாடகர் மனோவின் மகன்கள் ஷகீரும் ரபீக்கும், தர்மா மற்றும் விக்னேஷோடு இணைந்து தாக்கியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விக்னேஷையும், தர்மாவையும் கைது செய்தனர்.

மனோவின் மகன்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த நிலையில் மனோவின் மகன்களை, 10க்கும் மேற்பட்டோர் கல், கட்டையால் சரமாரியாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மனோவின் மனைவி ஜமீலா, ”என் மகன்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் சிறு வயதினர் என்பதால் அவர்களை மன்னித்து விடலாம். எங்கள் குடும்பத்தினர் அவதூறாக பேசப்படுவதாலேயே, சிசிடிவி காட்சி ஆதாரங்களை தற்போது வெளியிட்டுள்ளோம். என் மகன்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பின்னணியில், வேறு ஏதோ திட்டமிருக்கிறது. என் மகன்களை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

மனோவின் மனைவி மற்றும் மருமகள்

அதேபோல் செய்தியாளர்களிடம் பேசிய மனோவின் மகனான ரபீக்கின் மனைவி, ”இந்த விவகாரத்தில் காவல் துறையினர் முறையாக விசாரணை நடத்தவில்லை. அதுமட்டுமின்றி வீட்டில் வேலை செய்தவர்களை நண்பர்கள் என கூறி, காவல் துறையினர் கைது செய்துவிட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

மனோவின் மகன்கள் தாக்கப்படும் வீடியோ புதிய தலைமுறையில் வெளியானதை தொடர்ந்து, காவல் துறையினர் மனோவின் வீட்டிற்கு சென்று, மீண்டும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையின் அடிப்படையில், காவல் துறையினரின் அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.