தமிழ்நாடு

குழந்தை தொழிலாளர்களாக மாறிய மாணவிகளை மீட்டு மீண்டும் பள்ளியில் சேர்த்த மாணவி

குழந்தை தொழிலாளர்களாக மாறிய மாணவிகளை மீட்டு மீண்டும் பள்ளியில் சேர்த்த மாணவி

kaleelrahman

குடும்ப வறுமையினால் இலவச கல்வியை கூட பெற இயலாமல் குழந்தை தொழிலாளர்களாக மாறிய மாணாக்கர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்த 11 ஆம் வகுப்பு மாணவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருபவர் ப்ரியதர்ஷினி. தனி ஒரு ஆளாக பள்ளி ஆசிரியர் புவனேஸ்வரி மற்றும் தலைமை ஆசிரியரின் வழிகாட்டுதலோடு 20 மாணக்கர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்துள்ளார்.

வலங்கைமான் பகுதியை சேர்ந்த பிரியதர்ஷினியின் குடும்பம் வறுமையில் சிக்கி இருந்த காலகட்டத்தில் இவருடைய தாய் மற்றும் தந்தை வெளியூர் சென்று பட்ட கடனை அடைக்க கஷ்டப்பட்டு கொண்டிருந்தார்கள் இவர் இவருடைய தம்பியுடன் வலங்கைமானில் உள்ள பாட்டி வீட்டில் வசித்து வந்துள்ளார்.

ப்ரியதர்ஷினி தனக்கு 13 வயது இருக்கும்போது குடும்பத்தின் நிலை அறிந்து பள்ளி முடிந்த பின்பு வேலைக்குச் சென்றுள்ளார். அவரின் பெரியம்மா மற்றும் பெரியம்மாளின் மகன் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில்; அதன் பிறகு அவர் வேலைக்குச் செல்லாமல் இருந்திருக்கிறார். அப்போது தான் குழந்தை தொழிலாளர்கள் குறித்து அவர் அறிந்திருக்கிறார்.

இதையடுத்து பள்ளி தோழிகளும் ஆசிரியர்களும் அவருடைய பெரியம்மா பெரியம்மா மகன் ஆகியோர் பிரியதர்ஷினிக்கு பக்கபலமாக இருந்து உதவி செய்திருக்கிறார்கள். இருந்த போதிலும் தன்னை போல எத்தனை குடும்ப பிள்ளைகள் இவ்வாறு கஷ்டப்படுவார்கள் என்று எண்ணிய பிரியதர்ஷினி, பள்ளியில் இடைநிற்றலாகி வேலைக்குச் சென்ற மாணாக்கர்களின் குடும்பத்தை நேரில் சந்தித்து கல்வியின் முக்கியத்துவத்தை விளக்கி அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்துள்ளார்.

இவர் பள்ளிக்கூடம் செல்லாத பிள்ளைகளின் வீட்டில் பேசும்போது சில பெற்றோர் அவருடைய கருத்துக்கு முதலில் செவிசாய்க்காமல் இருந்து, கல்வியின் முக்கியத்துவம் குறித்து பிரியதர்ஷினி கூறிய பிறகு அவர்கள் வீட்டுப் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளார்கள்

இதைத் தொடர்ந்து முதல்வருக்கு ஒரு கோரிக்கையை வைத்துள்ளார் ப்ரியதர்ஷினி அது குழந்தை தொழிலாளர்கள் வயதுவரம்பை 14ல் இருந்து 18 ஆக உயர்த்தக் கேட்டுக் கொண்டுள்ளார். இதையடுத்து வழக்கறிஞராக ஆக விரும்பும் ப்ரியதர்ஷினி தனி ஒருத்தியாக பல மாணக்கர்களின் கல்வி தாகத்தை போக்கியதை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.