model image freepik, twitter
தமிழ்நாடு

நாகரீக சமூகத்தில் இப்படியா..! நெல்லையில் தொடரும் சாதி ரீதியான வன்கொடுமை சம்பவங்கள்.. என்ன காரணம்?

திருநெல்வேலியில் பட்டியல் சமூக இளைஞர்கள் மீது போதைக்கும்பல் சாதிவெறி தாக்குதல் நடத்தியதில் 6 பேர் கைது செய்யப்பட்டநிலையில், சாதிய மனப்பான்மையோடு மேலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

Prakash J

திருநெல்வேலி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் நபர், கடந்த 30ஆம் தேதி ஆச்சிமடம் பகுதியில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, அங்குவந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவரை வழிமறித்து அவரது சாதி குறித்து கேட்டதாக தெரிகிறது. பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்று அவர் தெரிவிக்க, அதைக்கேட்டதும் அந்த நபர்கள் அவரை கல்லால் தாக்கியுள்ளனர். இதில் அவரின் தலை மற்றும் இடுப்புப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. காயங்களுடன் சாலையில் அமர்ந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். சிவந்திபட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அந்த நபர்களை தேடிவருகிறார்கள்.

இதேபோன்ற கொடுமை அதே 30ஆம் தேதி மாலையில் நெல்லை மணிமூர்த்தீஸ்வரர் ஆற்றில் குளிக்கச்சென்ற 2 இளைஞர்களுக்கு நேர்ந்துள்ளது. பட்டியலின இளைஞர்களை நிர்வாணப்படுத்தி அடித்து துன்புறுத்தியதோடு, அவர்கள் மீது சிறுநீர் கழித்த கஞ்சா போதைக் கும்பலை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுபோன்ற சாதிய வன்கொடுமை தாக்குதலை செய்தவர்களை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரி திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தென் மாவட்டங்களில் இதுபோன்ற சாதிய வன்கொடுமைகள் நடக்காமல் தடுத்திட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் மே மாதம் வரை எஸ்சி மற்றும் எஸ்டி சமூகத்தினருக்கு எதிரான குற்றங்கள் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கிடைத்துள்ளன. இதன்படி தென்மாவட்டங்களில் சாதிக்கொடுமைகள் குறையாமல் இருப்பது தெரியவருகிறது.

model image

தமிழ்நாட்டில் 2019 முதல் 2021 வரை 3,795 வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2016-2020 க்கு இடையில், தமிழ்நாடு முழுவதும் சாதிய வன்முறை சம்பவங்களில் 300 கொலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று ஆர்டிஐ பதிலில் தெரியவந்துள்ளது.

பட்டியலினத்தவருக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக, 2022 நவம்பர் 2023 மே மாதம் வரையிலான தரவுகளின்படி, மதுரை மாவட்டத்தில் 84 வழக்குகளும்,தேனி மாவட்டத்தில் 66 வழக்குகளும் பதிவாகி இருக்கின்றன.

திருநெல்வேலி மாவட்டத்தில் 50 வழக்குகளும்,விழுப்புரத்தில் 44 வழக்குகளும், ராமநாதபுரத்தில் 41 வழக்குகளும்,தென்காசி மாவட்டத்தில் 38 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உள்துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, 2019-2021 வரையிலான காலகட்டத்தில் ஆந்திரப் பிரதேசம், பீகார், சத்தீஸ்கர், குஜராத், ஜார்கண்ட், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் அந்தமான் நிக்கோபார் ஆகிய பகுதிகளில் வன்கொடுமைகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன.

தொடரும் சா'தீ'யக் கொடுமைகளுக்கு யார் காரணம், இதில் மாறவேண்டியது யார் என்பது குறித்து விரிவாக அலசுகிறார், எவிடென்ஸ் கதிர். அவர் பேசிய கருத்துக்களை இந்த வீடியோவில் பார்க்கவும்.

இதையும் படிக்க: ’என்னைக் கேட்காமல் ஏன் டிரீம் செய்தாய்?’ - புருவத்தை அலங்காரம் செய்த பெண்ணிற்கு தலாக் கூறிய கணவர்!