(கோப்புப் படம்)
மதுரை அருகே ஒரே தண்டவாளத்தில் எதிர் எதிரே இரு ரயில்கள் வந்தநிலையில், கடைசி நேரத்தில் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் பயணிகள் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர்.
மதுரையில் இருந்து செங்கோட்டை நோக்கி புறப்பட்ட ரயில் தாமதமாக திருமங்கலம் ரயில்நிலையம் வந்தடைந்தது. இதனால், அந்த ரயில் அங்கிருந்து உடனடியாக புறப்பட சிக்னல் கொடுக்கப்பட்டது. அதே சமயம், செங்கோட்டையில் இருந்து மதுரை நோக்கி அதே தண்டவாளத்தில் மற்றொரு பயணிகள் ரயில் வந்துக் கொண்டிருந்தது.
ஒருவழிப் பாதை என்பதால் செங்கோட்டை செல்ல வேண்டிய ரயில் திருமங்கலத்திலேயே நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ரயில் புறப்பட சிக்னல் கொடுக்கப்பட்டதால், இரு ரயில்களும் மோதும் நிலை உருவானது.
(மாதிரிப்படம்)
இதைத் தொடர்ந்து வாக்கி டாக்கி மூலம், இரு ரயில்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து, ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. இதனால், இரு ரயில்களும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்படுவது தவிர்க்கப்பட்டது. பின்னர் செங்கோட்டை சென்ற ரயில் மீண்டும் திருமங்கலம் நோக்கி வந்தது. சிக்னல் கோளாறு காரணமாக இந்த சம்பவம் நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டதால், பயணிகள் அதிகாரிகளை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.