புழல் ஏரி புதிய தலைமுறை
தமிழ்நாடு

சென்னையில் குடிநீர் பற்றாக்குறை வருமா.. கொளுத்தும் கோடையில் ஏரிகளின் நிலவரம் என்ன?

PT WEB

புழல் ஏரிக்கு நீர்வரத்து சீராக வருவதால், சென்னைக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி முழு வறட்சியை கண்டுள்ளது. அதே போல, சோழவரம் ஏரியும் வறட்சியைநோக்கி சென்று கொண்டிருக்கிறது.

செம்பரம்பாக்கம், பூண்டி மற்றும் கண்ணன்கோட்டை- தேர்வாய்கண்டிகை நீர்தேக்கத்திலும் நீரின் அளவு குறைந்து வருகிறது.

இந்நிலையில், 3ஆயிரத்து 300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் தற்போது 2ஆயிரத்து 862 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.

மேலும் 21 அடி உயரம் கொண்ட ஏரியில் தற்போது 19 அடிக்கு நீர் உள்ளது. மேலும் புழல் ஏரிக்கு நீர்வரத்து 215 கன அடியாக உள்ள நிலையில், சென்னை குடிநீருக்காக விநாடிக்கு 251 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. இந்த சூழலில், ஏரியில் 86.73 விழுக்காடு அளவிற்கு நீர் இருப்பு உள்ளதால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.