தமிழ்நாடு

வீட்டை பூட்டிவிட்டு இறுதிச் சடங்கிற்கு சென்று திரும்பியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

webteam

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே இறுதிச் சடங்கிற்காக உறவினர் வீட்டிற்கு சென்ற நிலையில் வீட்டின் பூட்டை உடைத்து 120 சவரன் தங்க நகைகள், ரூ.3 லட்சம் ரொக்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே கொங்கு நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். ஜவுளி உற்பத்தி நிறுவன உரிமையாளரான இவர், நேற்று நள்ளிரவு தனது குடும்பத்துடன் மோடமங்கலத்தில் தனது உறவினரின் இறுதிச்சடங்கிற்காக சென்றுள்ளார். இதையடுத்து காலையில் வீடு திரும்பியபோது வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்துள்ளார்.

அப்போது பீரோவில் வைத்திருந்த 120 பவுன் தங்க நகைகள், 3 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் மற்றும் வீட்டில் இருந்த 3 சிசிடிவி கேமராக்கள் டிவிஆர் கருவியும் கொள்ளைபோனது தெரியவந்தது. இதையடுத்து மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த குமாரபாளையம் போலீசார், கொள்ளை நிகழ்ந்த இடத்தில் உள்ள தடயங்களை சேகரித்தனர்.

இச்சம்பவம் குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள குடியிருப்பு பகுதியில் நிகழ்ந்த கொள்ளை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.