கைது செய்யப்பட்ட சந்திரன்  PT WEB
தமிழ்நாடு

ஈரோடு : மருமகனை வேன் ஏற்றி கொலை செய்ய முயன்ற மாமனார் கைது

சத்தியமங்கலத்தில் மருமகனைக் கொலை செய்ய முயற்சி செய்த வழக்கில் மாமனார், மாமியார் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விமல் ராஜ்

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள எரங்காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ். இவர் ஆம்புலனஸ் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் காந்திநகரைச் சேர்ந்த சந்திரன் என்பவருடைய மகள் மஞ்சு என்பவரைக் கலப்பு திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் திருமணத்துக்கு மஞ்சுவின் பெற்றோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்துள்ளனர்.

இந்தநிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற்ற நிலையில், சுபாஷை மஞ்சுவின் பெற்றோர், மருமகனான ஏற்றுக்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி மஞ்சுவின் தந்தை சுபாஷ் வீட்டுக்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சித்ரா

இந்த சூழலில், கடந்த 6-ம் தேதி சுபாஷ் தனது இரு சக்கர வாகனத்தில் தங்கை ஹாசினியை பின்னால் அமர வைத்து, சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார். அப்போது பவானிசாகர் சாலை, நெசவாளர் காலனி என்ற இடத்தில் சுபாஷ் சென்ற இரு சக்கர வாகனம் மீது பின்னால் வந்த வேன் பயங்கரமாக மோதியதில் இருவரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த, ஹாசினி நேற்று முன் தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சுபாஷ் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டதில் சுபாஷ் மாமனார் சந்திரன், வேனை ஓட்டி வந்து மருமகன் சுபாஷ் வாகனம் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது தெரியவந்தது. இதற்கு உடந்தையாக, சந்திரன் மனைவி சித்ரா இருந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.

மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய, சந்திரன், உறவினர்களான, கோவை தட்டாம்புதூர் பகுதியைச் சேர்ந்த அம்மாசைகுட்டி 45, கோவை வெங்கிடாபுரம் பகுதியைச் சேர்ந்த, ஜெகதீஸ் 35 ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து, ஈரோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

மருமகனை, வேனை ஏற்றி மாமனார் கொலை செய்ய முயன்ற சம்பவம் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.