ஆ ராசா, நிர்மலா சீதாராமன் pt web
தமிழ்நாடு

“பேரிடருக்கான நிதி பற்றி கேட்டால் கவுண்டமணியின் வாழைப்பழ காமெடி போல் பேசுகிறார்கள்” - எம்.பி. ஆ.ராசா

"குஜராத்திற்கும் கர்நாடகத்திற்கும் கொடுத்துள்ளீர்கள். உங்கள் ஆட்சி நடக்கும் பகுதிகளில் 1000 கோடி, 1500 கோடி கொடுத்துள்ளீர்கள். தமிழ்நாட்டை ஏன் வஞ்சிக்கிறீர்கள் என்பது தான் கேள்வி" ஆ.ராசா எம்.பி.

PT WEB

நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில் உள்ள பவானிசாகர் தெற்கு மற்றும் வடக்கு ஒன்றியங்கள், புஞ்சை புளியம்பட்டி நகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், முடிவுற்ற பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நீலகிரி எம்பி ஆ.ராசா திறந்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஆ.ராசா, “மத்திய அரசின் தேசிய பேரிடர் நிவாரண நிதி மற்றும் மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட பேரிடர் நிதி என இரண்டு விதமான நிதிகள் உள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் பஞ்சம், வறட்சி வந்தாலோ, மழை வெள்ளங்கள் ஏற்பட்டாலோ அதை எதிர்கொள்வதற்கு மாநில அரசாங்கம் கொடுக்கும் வரிப்பணத்தில் இருந்து, ஒவ்வொரு மாநிலத்திற்கும் தன்னியல்பாகவே கொடுப்பார்கள். அதில் ரூ.1500 கோடி மட்டுமே தமிழக அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. அது தமிழ்நாட்டு மக்கள் கொடுத்த பணம்.

நாங்கள் கேட்பது மத்திய அரசின் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வெள்ள நிவாரணத்திற்கு நிதி வழங்க வேண்டும் என கேட்டோம். அதற்காகத்தான் நிதியமைச்சரும், பாதுகாப்பு அமைச்சரும் வந்தார்கள். நாடாளுமன்றத்தில் நான் கேட்டால், நிதித்துறை அமைச்சர் அந்தப் பணம் தான் இந்த பணம் என்கிறார். கவுண்டமணியின் வாழைப்பழ காமெடி போல் பேசுகிறார்கள்.

நிவாரண நிதி கொடுத்துள்ளீர்கள் அது இல்லை என சொல்லவில்லை. அது எங்கள் பணத்திலிருந்து எங்களுக்கு கொடுக்க வேண்டிய நியாயமான பங்கு. ஆனால் குஜராத்திற்கும் கர்நாடகத்திற்கும் கொடுத்துள்ளீர்கள். உங்கள் ஆட்சி நடக்கும் பகுதிகளில் 1000 கோடி, 1500 கோடி கொடுத்துள்ளீர்கள். தமிழ்நாட்டை ஏன் வஞ்சிக்கிறீர்கள் என்பது தான் கேள்வி. ஆனால், திரும்பத்திரும்ப நிர்மலா சீதாராமன், வானதி சீனிவாசம் அதைத்தான் சொல்கிறார்கள்” என தெரிவித்தார்.