கோவை ஈஷா யோகா மையத்திலுள்ள ஆதியோகி சிலை முன்பு மதப் பரப்புரை செய்ததாகப் பாதிரியார் ஒருவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெபசிங். இவர் அப்பகுதியிலுள்ள சர்ச்சில் பாதிரியாராக உள்ளார். இந்த நிலையில் இவர் கோவை ஈஷா யோக மையத்திலுள்ள ஆதியோகி சிலை முன்பு மக்கள் கூட்டம் உள்ள நேரத்தில் ஏறி நின்றார். அத்துடன் ஏசுதான் உங்கள் அனைவரையும் காப்பாற்றுவார், இந்தச் சிலையும் இந்தச் பாம்பும் உங்களை ஒருபோதும் காப்பாற்றாது என்று கூறினார்.
மேலும், இந்தச் சிலையை திறந்து வைத்த பிரதமர் மோடிக்கும் சேர்த்துச் சொல்கிறேன், இயேசுதான் உங்கள் அனைவரையும் காப்பாற்றுவார் என மதப் பிரச்சாரம் மேற்கொண்டார். இதுதொடர்பாக காணொளியும் வெளியாகியுள்ளது. இதையடுத்து ஈஷா யோகா நிர்வாகிகள் கோவை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் பாதிரியார் கைது செய்யப்பட்டுள்ளார். நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தரும் ஆதியோகி சிலை முன்பு ஒரு பாதிரியார் மதப் பரப்புரை செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.