கோவையில் இந்து முன்னணி பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்திருந்தவர், 6 பேர் கொண்ட கும்பலால் ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
கோவை பாப்பநாயக்கன்பாளையம் பழையூர் பகுதியைச் சேர்ந்தவர் சக்தி என்கிற சத்தியபாண்டி (32). டிரைவரான இவர், நேற்றிரவு நவஇந்தியாவில் இருந்து ஆவாரம் பாளையம் செல்லும் சாலையில் உள்ள இளநீர் கடை அருகே தனது நண்பர்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் அங்கு சென்ற 6 பேர் கொண்ட மர்ம கும்பல், அரிவாளால் சத்தியபாண்டியை சரமாரியாக வெட்டியுள்ளனர்.
முதலில் சுதாரித்துக் கொண்ட சத்தியபாண்டி, உயிர் பிழைக்க அங்கிருந்து ஓடத் தொடங்கியிருக்கிறார். இருப்பினும் விடாமல் துரத்திச் சென்ற மர்ம கும்பல், அவரை சரமாரியாக வெட்டியது. அதில் படுகாயம் அடைந்த சத்தியபாண்டி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார், சத்தியபாண்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சத்தியபாண்டியன், கடந்த 2020 ஆம் ஆண்டு கோவை காந்திபுரம் பகுதியில் இந்து முன்னணி பிரமுகர் பிஜூ என்பவர் கொலை வழக்கில் செய்யப்பட்டிருந்தவராவார். அந்தச் சம்பவத்தில் சத்தியபாண்டிக்கும் தொடர்பு இருந்நதாகக் கூறப்பட்டு, அவர் கைதாகியிருந்தார். பின்னர் ஜாமீனில் அவர் வெளியே வந்துள்ளார். அப்படி வெளியே வந்தபோது அவர் கொல்லப்பட்டிருப்பதால், முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
இதையடுத்து தப்பியோடிய மர்ம கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கொலை சம்பவத்தில் துப்பாக்கியால் சத்தியபாண்டியை அந்நபர்கள் சுட்டதாகவும் கூறபடுகிறது. இருப்பினும் விசாரணை முடிந்த பின்னரே இதுபற்றி தெரியவரும்.