தமிழ்நாடு

ஃபிலிப்கார்ட் ஊழியரிடம் மிளகாய்ப்பொடி தூவி திருட முயற்சி

ஃபிலிப்கார்ட் ஊழியரிடம் மிளகாய்ப்பொடி தூவி திருட முயற்சி

webteam

ஃபிலிப்கார்ட் நிறுவன ஊழியரின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி செல்போனை திருட முயன்ற இளைஞரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே கணபதிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வல்லரசு (24). இவர் ஆன்லைன் நிறுவனமான ஃபிலிப்கார்ட் மூலம் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை கேஷ் ஆன் டெலிவரி முறையில் ஆர்டர் செய்துள்ளார். செல்போன் மோகம் கொண்ட வல்லரசுக்கு, அதை வாங்கும் அளவிற்கு பணம் இல்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் செல்போனை திருட நூதன திட்டத்தை சிந்தித்துள்ளார். செல்போனை டெலிவரி செய்ய வரும் நபரின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி தாக்கிவிட்டு, செல்போனை கொண்டு சென்றுவிடலாம் என நினைத்துள்ளார். 

இதையறியாத ஃபிலிப்கார்ட் நிறுவனத்தின் டெலிவரி ஊழியரான சங்கர் என்பவர், செல்போனை கொடுப்பதற்காக வல்லரசு இல்லத்தை தேடி வந்துள்ளார். அப்போது சங்கரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட வல்லரசு கொக்கராயம்பேட்டை பகுதிக்கு செல்போனை கொண்டு வருமாறு தெரிவித்துள்ளார். அவர் சொன்னபடியே அந்த இடத்திற்கு வந்த சங்கருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் அங்கே திடீரென ஒரு நபர் சங்கரின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி தாக்கிவிட்டு, செல்போனை பறிக்க முயன்றுள்ளார்.  

யாரோ திருடன் ? செல்போனை பறிக்க முயல்கிறான் என நினைத்து, சங்கர் ‘திருடன் திருடன்’ என கூச்சலிட்டுள்ளார். வல்லரசு பதட்டத்துடன் வேகமாக சங்கரிடம் இருந்து செல்போனை பறிக்க முயற்சித்துள்ளார். ஆனால் அதற்குள் மக்கள் அங்கு ஓடிவந்துவிட்டனர். வந்த வேகத்தில் வல்லரசுவை சுற்றிவளைத்த மக்கள், தர்ம அடி கொடுத்துள்ளனர். பின்னர் அவரை மொளசி காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். வல்லரசுவை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.