படியில் பயணித்தபோது மரணித்த இளைஞர் புதிய தலைமுறை
தமிழ்நாடு

சென்னை | படியில் பயணம்... நொடியில் மரணம்! வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி

சென்னை எழுப்பூரில் இருந்து புறப்பட்ட ஒரு ரயிலில் படியில் பயணம் செய்தபோது, மின்னல் வேகத்தில் பிளாட்பார்மில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார் ஒரு இளைஞர். அச்சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஜெ.அன்பரசன்

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து விரைவு ரயிலில் பயணம் செய்த இளைஞரொருவர், படிக்கட்டில் பயணம் செய்த போது திடீரென கால்களை நீட்டியபோது, அவை பிளாட்ஃபார்மில் பட்டுள்ளன. இதில் அவர் ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்டுள்ளார். இதில் சுமார் 200 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட அவர், ரயிலுக்கும் பிளாட்பார்முக்கும் இடையில் சிக்கி உயிரிழந்துவிட்டார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று மதியம் 1:50 மணி அளவில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து வைகை எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் கிளம்பி உள்ளது. சரியாக 02:04 மணிக்கு விரைவு ரயிலானது சைதாப்பேட்டை ரயில் நிலையத்தை கடந்து அதிவேகமாக பயணித்துள்ளது.

இளைஞரின் டிக்கெட்

அப்போது முன்பதிவில்லா கடைசி பெட்டியின் படிக்கட்டில் பயணம் செய்த இளைஞர் ஒருவர் ரயில்வே பிளாட்ஃபார்ம் வருவதை அறியாமல் தனது காலை நீட்டியுள்ளார். வேகமாக சென்றுக்கொண்டிருந்த ரயிலில் இருந்து அவர் காலை நீட்டியதால் அவரது கால் பிளாட்பார்மில்பட்டு ரயிலிருந்து தூக்கி வீசப்பட்டார்.

சுமார் 200 மீட்டர் தூரம் ரயில் செல்லும் பாதையில் தரதரவென பிளாட்பார்மில் இழுத்து செல்லப்பட்ட அந்த இளைஞர், பின் ரயிலுக்கும் பிளாட்பார்முக்கும் இடையில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்த மாம்பலம் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த இளைஞரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முகம், நெஞ்செலும்புகள் உடைந்து, கால் துண்டாகி உடம்பு முழுவதும் காயம் ஏற்பட்டு இளைஞர் உயிரிழந்ததாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

பின் விசாரணைக்கு மேற்கொண்டதில், உயிரிழந்த இளைஞர் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலை அடுத்த கண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஆத்தங்கரை தெரு பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (24) என்பது தெரியவந்தது. இவர் வடசென்னை அத்திபட்டு புதுநகரில் இயங்கி வரும் தெர்மல் பவர் பிளாண்டில் பணிபுரிந்து வந்ததும், விடுமுறைக்காக இவர் நேற்று மதியம் தனது ஊருக்கு செல்வதற்காக வைகை எக்ஸ்பிரஸில் பயணம் செய்ததும் சைதாப்பேட்டை ரயில் நிலையம் வரும்போது எதேச்சையாக காலை நீட்டியதும், அப்போது பிளாட்பார்மில் மோதி விபத்து ஏற்பட்டதும் தெரிய வந்தது.

பாலமுருகன்

இந்த நிலையில் விபத்து நடந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலமுருகனை சுற்றி இருந்த பயணிகளுக்கு இப்படி ஒரு விபத்து நடந்தது கூட தெரியாமல் அவரவர்கள் தங்களது வேலையை பார்த்துக் கொண்டிருந்ததும் சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. ரயில் கடந்த பின்பு, சைதாப்பேட்டை பிளாட்பார்மில் இளைஞர் பாலமுருகன் இறந்து கிடக்கும் தகவலை அங்கிருந்த பொதுமக்கள்தான் போலீசாருக்கு தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து மாம்பலம் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பேருந்து, ரயில் போன்ற வாகனங்களில் படியில் அமர்ந்து பயணம் செய்யக் கூடாது என தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில் விரைவு ரயில் படியில் அமர்ந்து பயணம் செய்த இளைஞர் ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்டு பிளாட்பாரத்துக்கும் ரயிலுக்கும் இடையில் சிக்கி உயிரிழந்த சம்பவமானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.