அரசு ராஜாஜி மருத்துவமனையில் பாக்கியம் என்கின்ற வயதான மூதாட்டி உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த பத்து நாட்களுக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அந்த மூதாட்டியை உறவினர்கள் யாரும் வந்து பார்க்காத காரணத்தினால் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டதாக மூதாட்டி வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
உடம்பில் பலத்த காயத்துடன் அரசு மருத்துவமனை வளாகத்தில் வெளியேவே ஈக்கள் மேய்த்துக் கொண்டிருக்க ஆடை இன்றி சாலை ஓரத்தில் படுத்திருக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
தமிழக அரசு சமூக நலத்துறை மூலம் ”மூத்த குடிமக்கள் பாதுகாப்புடனும் மரியாதையுடனும் வாழத் தேவையான அடிப்படை வசதிகளைப் பூர்த்தி செய்து, மூத்த குடிமக்கள் பயனடையும் வகையிலும் உதவும் வகையிலும் 14567 கட்டணம் இல்லா தொடர்பு எண்ணை” அறிவித்திருந்தது. அதன்படி இந்த மூதாட்டி நிலை குறித்து இந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பேசும் பொழுது தற்காலிகமாக முதியோர்கள் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது உடனடியாக தொண்டு நிறுவனத்தின் மூலம் அந்த மூதாட்டிக்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். அதன்படி மதுரை ரெட் கிராஸ் அமைப்பின் உதவியுடன் மூதாட்டி மீட்கப்பட்டு மீண்டும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.