தமிழ்நாடு

கொரோனாவுக்கு மருந்து எனக்கூவி விற்ற வடமாநிலத்தவர் : சிந்திக்காமல் குவிந்த மக்கள்

webteam

கொரோனா வைரஸ்க்கு மருந்து என வடமாநிலத்தவர் தெருவில் கூவியதை அடுத்து மக்கள் அதிக அளவில் கூடிய சம்பவம் காஞ்சிபுரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் கடைவீதியில் கொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக கூறி பொதுமக்களிடையே ஏதோ ஒன்றை ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இந்திரஜித் மண்டல் என்பவர் விற்பனை செய்தார். கொரோனா வைரஸை அழிப்பதற்கு மருந்து தன்னிடம் உள்ளது என்ற அவரது பேச்சை நம்பி, அப்பகுதி மக்கள் பலர் ஒரே இடத்தில் ஒன்று கூடி நின்றனர்.

இதைக்கண்ட காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ள, அந்த வடமாநிலத்தவர் காவலரை கண்டதும் அங்கிருந்து தலைதெறிக்க ஓட முயற்சித்தார். தப்பி ஓட முயன்ற அவரை மடக்கி பிடித்து விசாரித்ததில் சளி மற்றும் காய்ச்சலுக்கு உண்டான மருந்துகளை தூளாக்கி பேப்பரில் மடித்து வைத்து கொரோனா வைரஸ் அழிப்பதற்கான மாற்று மருந்து என ஏமாற்றியது தெரியவந்தது. அவர் மாம்பாக்கம் பகுதியில் பீடா கடை வைத்துள்ளவர் என்பதும் விசாரணையில் வெளிவந்தது. அந்த நபரை விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு போலீஸார் அழைத்து சென்றனர்.

உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ்க்கு இதுவரையில் எந்த நாடும் மருந்து கண்டிபிடிக்கவில்லை. அமெரிக்காவே உலக நாடுகளிடம் மருந்துக்காக கையேந்தி நின்றுகொண்டிருக்கிறது. இப்படி இருக்கையில் யாரோ ஒரு நபரின் பேச்சைக் கேட்டு மக்கள் கூடிய சம்பவம், கொரோனா பற்றிய விழிப்புணர்வு முற்றிலும் இல்லாமல் மக்கள் இருப்பதற்கு ஒரு உதாரணமாக அமைந்திருப்பதாக அப்பகுதி சமூக ஆர்வலர்கள் வருந்தினர்.

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் பட்சத்தில் அதனை அரசே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். அப்படி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை எந்த தகவலை நம்ப வேண்டாம் என்று அரசு தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டு வருகிறது.