ESI pt desk
தமிழ்நாடு

கோவை: குற்ற சம்பவங்களில் ஈடுபடும் சிறுவர்களை நல்வழிப்படுத்த புதிய முயற்சி...

webteam

செய்தியாளர்: ஐஷ்வர்யா

கோவையில் திருட்டு உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை நல்வழிப்படுத்த சிறுவர்கள் சீர்திருத்த பள்ளி உள்ளது. அங்கு சிறுவர்களுக்கு சீர்திருத்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இருந்த போதிலும் அவர்களில் சிலர் விடுதலைக்கு பின்பும் குற்றங்களில் ஈடுபடுவது ஆங்காங்கே நடந்து வருகிறது. எனவே குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு கோவை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ள சிறுவர்களை நல்வழிப்படுத்த, சிறுவர் நீதி வாரியத்தால் சில முடிவுகள் எடுக்கப்பட்டன.

ESI

அதன்படி, முதற்கட்டமாக நான்கு சிறுவர்கள் கோவை சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு 15 நாட்கள் அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட ஏதாவது பிரிவில் பணி செய்ய அறிவுறுத்தப்பட்டனர். அவ்வாறு பணி செய்தால் மட்டும் பிணை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி சமூக சேவை திட்டத்தின் கீழ் போக்சோ, கொள்ளை வழக்குகளில் சிக்கிய 4 சிறுவர்கள் கடந்த மாதம் இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு இருப்பிட மருத்துவ அதிகாரி மருத்துவர் மணிவண்ணன் மேற்பார்வையில் அந்த சிறுவர்களுக்கு அறுவை சிகிச்சை பிரிவு, சமையல் கூடம் ஆகிய இடங்களில் 15 நாட்கள் பணி வழங்கப்பட்டது. அங்கு அவர்கள் உதவியாளராக பணியாற்றினர். இ.எஸ்.ஐ மருத்துவமனையின் இந்த திட்டத்தின் மூலம் சிறுவர்களை நல்வழிப்படுத்த 15 நாட்கள் பணி வழங்கியது இதுவே முதல் முறையாகும்.