மாத்திரை புதிய திலைமுறை
தமிழ்நாடு

தாயின் தூக்க மாத்திரையை தெரியாமல் சாப்பிட்ட குழந்தை; அதனால் ஏற்பட்ட சோகத்தில் தாய் எடுத்த முடிவு...

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.

PT WEB

செய்தியாளர் - சாந்த குமார்

சென்னை தாம்பரத்தை அடுத்த சேலையூர் சந்தோஷபுரத்தில் தனது தாய் சுதாவுடன் வசித்து வருபவர் அஸ்வினி (31). சிறுசேரியில் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் இவர். இவரின் கணவர் குஜராத்தில் பணிபுரிந்து வருகிறார். இத்தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில், மூத்தவரான மகன் ஹிரிதில்வ் (7) உடல் நிலை சரியில்லாமல் கடந்த ஜனவரி மாதம் உயிரிழந்துள்ளார். இதனால் தாய் அஸ்வினி மிகுந்த மன உளைச்சலில் தூக்கமின்மையால் பாதிக்கப்படுள்ளார்.

மன அழுத்தம்

ஆகவே மருத்துவர்கள் பரிந்துரையில் தூக்க மாத்திரைகளை பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு தூங்குவதற்கு முன்பு படுக்கையின் பக்கத்தில் மாத்திரைகளை வைத்து விட்டு கழிவறை சென்றுள்ளார் அவர். அந்த நேரத்தில் எல்கேஜி படிக்கும் இவரின் மகள் ஹார்த்ரா (4), தூக்க மாத்திரையை தவறுதலாக எடுத்துச் சாப்பிட்டுள்ளார். இதை தாய் கவனிக்கவில்லையென தெரிகிறது. பின்னர் இருவரும் தூங்கியுள்ளனர்.

காலை 4 மணியளவில் தாய் எழுந்து பார்த்த போது குழந்தை வாயில் நுரை தள்ளியபடி இருந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த தாய் அஸ்வினி, குழந்தையை எழுப்பியுள்ளார். ஆனால் குழந்தை இறந்துவிட்டதை அறிந்திருக்கிறார் அவர். தொடர்ந்து சோகத்தில் கடிதம் எழுதி வைத்துவிட்டு, கணவருக்கு தகவல் தெரிவித்துவிட்டு தானும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

சில மணி நேரங்களுக்குப்பின், அஸ்வினியின் தாய் சுதா, தன் பேத்தியையும் மகளையும் காண அவர்களின் அறைக்குள் சென்றுள்ளார். அப்போது கழிவறையில் ரத்த வெள்ளத்தில் அஸ்வினியும், படுக்கையில் நுரைதள்ளியபடி குழந்தையும் இருந்துள்ளனர். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர், ஆம்புலன்ஸ் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தகவலறிந்து சென்ற சேலையூர் போலீசார் அஸ்வினியை மீட்டு மருத்துவமனைக்கும், குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.