தமிழ்நாடு

ஓஎல்எக்ஸ் மூலம் கார் வாங்க நினைத்தவரிடம் 1.5 லட்சம் மோசடி

ஓஎல்எக்ஸ் மூலம் கார் வாங்க நினைத்தவரிடம் 1.5 லட்சம் மோசடி

webteam

ஓஎல்எக்ஸ் (OLX) மூலம் கார் வாங்க சென்னை வந்தவரிடம் ரூ.1.5 லட்சம் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் எல்லையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் நயாஸ் அகமது (38). இவர் இன்னோவா கார் ஒன்றை மறு விற்பனையில் வாங்க நினைத்துள்ளார். அதற்காக ஆன்லைன் சந்தை சேவையான ஓஎல்எக்ஸ் இணையதளத்தில் தேடியுள்ளார். அப்போது சென்னை பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த சபீர் அகமது சில மாதங்களே ஆன இன்னோவா கார் விற்பனைக்கு உள்ளதாக பதிவு செய்துள்ளார். இதைக் கண்டதும் சபீர் அகமதுவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நயாஸ் பேசியுள்ளார்.

அதற்கு நேரில் வந்து காரை பார்த்துவிட்டு எடுத்துச் செல்லுமாறும், வரும் போது முன்பணம் கொண்டு வருமாறும் சபீர் கூறியுள்ளார். அதன்படியே முன்பணம் ரூ.1.5 லட்சத்தை எடுத்துக்கொண்டு பட்டினப்பாக்கம் வந்துள்ளார் நயாஸ். அவருக்கு தனது காரை கொண்டு வந்து காண்பித்த சபீர், காரை பரிசோதித்து பார்க்குமாறு கூறியுள்ளார். நயாஸும் பார்த்துவிட்டு தனக்கு வாங்குவதற்கு விருப்பம் எனக்கூற, இறுதியாக ரூ.12 லட்சத்திற்கு கார் விலை பேசப்பட்டுள்ளது. முன்னதாக பேசியபடி முன்பணத்தை தருமாறு சபீர் கேட்க, நயாஸ் தான் கொண்டு வந்த ரூ.1.5 லட்சத்தை கொடுத்துள்ளார்.

அப்போது காரில் இன்னும் சில சிறிய பிரச்னைகள் இருப்பதாகவும், அதை தாமே சரிசெய்து தருவதாகவும் சபீர் கூறியுள்ளார். அத்துடன் அருகாமையில் உள்ள தனது நண்பரின் மெக்கானிக் கடைக்கு கொண்டுசென்று சரிசெய்துவிட்டு வருவதாக கூறியுள்ளார். அவ்வாறு சென்றவர் திரும்பி வரவேயில்லை. தொலைபேசியில் நயாஸ் தொடர்புகொள்ள நினைத்த போதும், சபீரிடம் பேச முடியவில்லை. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டிருப்பதை உணர்ந்த நயாஸ், இதுதொடர்பாக பட்டினப்பாக்கம் காவல்துறையினரிடம் புகார் கொடுத்துள்ளார். புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், நயாஸ் கூறிய அடையாளங்களை வைத்து சபீரை தேடி வருகின்றனர்.