தமிழ்நாடு

கலவரத்தை தூண்டும் விதமாக போலீஸ் உடையில் ‘டிக் டாக்’... ஆட்டோ டிரைவர் கைது..!

கலவரத்தை தூண்டும் விதமாக போலீஸ் உடையில் ‘டிக் டாக்’... ஆட்டோ டிரைவர் கைது..!

webteam

திருப்பரங்குன்றத்தில் போலீஸ் உடை அணிந்து கலவரத்தை தூண்டும் விதமாக டிக்டாக் செயலியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.

வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்று ‘டிக் டாக்’ செயலியை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இளைஞர்கள் என்று மட்டும் இல்லாமல் வயது வித்தியாசங்களை தாண்டி இந்தச் செயலிகளுக்கான வாடிக்கையாளர்கள் கோடிக்கணக்கில் உள்ளனர். ஒரு பாடலையோ, இசையையோ, அல்லது வசனத்தையோ பின்னால் ஓடவிட்டு அதற்கு ஏற்ப நடனமாடுவது, வசனம் பேசுவது, நடித்து காட்டுவது போன்றவற்றை இந்தச் செயலி மூலம் செய்யலாம்.  

இந்நிலையில் மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகே போலீஸ் உடை அணிந்து டிக் டாக் செய்தவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். திருப்பரங்குன்றத்தை அடுத்த நிலையூர் ஓம்சக்தி நகரைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் சரவணன்(30). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு காவல்துறை சார்பு ஆய்வாளர் போல உடையணிந்து ‘டிக் டாக்’ செயலி மூலம் நடித்து வெளியிட்டுள்ளார். அந்த பேச்சு சாதி கலவரத்தை தூண்டும் விதமாக இருப்பதாக போலீசாருக்கு புகார் வந்தது. 

இதனையடுத்து அந்த புகாரின் அடிப்படையில் திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். அப்போது போலீஸ் உடை அணிந்து கலவரத்தை தூண்டும் விதமாக பேசியது ஆட்டோ டிரைவர் சரவணன் என்பது தெரிந்தது. இதுகுறித்து திருநகர் காவல்துறையினர் இரண்டு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.