தமிழ்நாடு

குமரி: வயதான யாசகரை செருப்பால் அடித்த நகைக்கடை உரிமையாளர் - வீடியோ

webteam

குமரியில் வயதான யாசகர் ஒருவரை நகைக்கடை உரிமையாளர் ஒருவர் காலணியால் தாக்கும் கொடூர சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் இயங்கிவரும் நகைக்கடை ஒன்றில் வயதான பிச்சைக்காரர் ஒருவர் யாசகம் கேட்டு சென்றுள்ளார். அப்போது திடீரென பின்னால் இருந்து ஓடிவந்த நகைக்கடை உரிமையாளர் ராஜா என்பவர் தனது காலணியை எடுத்து யாசகரின் பின் தலையில் தாக்கியதுடன் கேவலமாக திட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்த கொடூர தாக்குதலின் காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவிலும் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளதுடன், இந்த தாக்குதலுக்கு பொதுமக்களும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து இந்த காட்சியில் உள்ள நகைக்கடை உரிமையாளர் ராஜகோபாலை தொடர்புகொண்டு கேட்டபோது, ’’இந்த முதியவர் எனது கடைக்கு வாரத்தில் இரண்டு முறை யாசகம் கேட்டு வருவார். அப்போது அவருக்கு ஐந்து ரூபாய் கொடுத்து அனுப்பி வைப்பது வழக்கம். இந்த நிலையில் இவர் காசு குறைவாக கொடுப்பதாகக் கூறி, என்னை திட்டிவிட்டு செல்வதும் வழக்கம். ஆனாலும் அவர் எனது கடைக்கு வரும்போதெல்லாம் நான் காசு கொடுத்து அனுப்புவதும் வழக்கம். வழக்கம்போல் அவர் போன வாரம் வந்தபோது ஐந்து ரூபாய் காசு கொடுத்தேன்.

அப்போது எனது கடையில் வாடிக்கையாளர்கள் அதிகமாக இருந்தனர். நான் கொடுத்த காசை வாங்கிவிட்டு எனது தாயை குறித்து கெட்டவார்த்தை கூறினார். இதனால் கோபமடைந்த நான் செருப்பை எடுத்து அவரை நோக்கி பாய்ந்ததை தவிர அவர்மீது தாக்குதல் நடத்தவில்லை. ஆனால் தொழில் போட்டி காரணமாக எனது கடையின் அருகில் உள்ள கடை உரிமையாளர் அவரது கடையில் இருந்த கேமராவில் பதிவான காட்சியை எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி, நான் அந்த பிச்சைக்காரனை தாக்கியதாக பதிவேற்றம் செய்துள்ளது’’ என்று விளக்கமளித்தார்.