காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சிலையை செய்ததில் சுமார் 100 கிலோ தங்கம் மோசடி செய்யப்பட்ட விவகாரத்தில் தேடப்பட்ட அர்ச்சகர் மும்பை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
ஏகாம்பரநாதர் கோயிலில் ஆயிரத்து 300 ஆண்டுகள் தொன்மையான சோமாஸ்கந்தர் உற்சவர் சிலை இருந்தது. சோமாஸ்கந்தர் மற்றும் ஏலவார்குழலி பஞ்சலோகச் சிலை சேதமடைந்து விட்டதாகக்கூறி அதற்குப் பதிலாக புதிய சிலை செய்ய முடிவெடுக்கப்பட்டது. அதற்கான அனுமதியை கடந்த 2015ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத் துறை வழங்கியது. இதனையடுத்து பக்தர்களிடம் இருந்து கிலோ கணக்கில் தங்கம் தானமாக பெறப்பட்டு புதிதாக சிலைகள் செய்யப்பட்டன. இந்தச் சூழலில் சோமாஸ்கந்தர் சிலையை செய்ததில் 8 புள்ளி 7 கிலோ தங்கம் முறைகேடு செய்யப்பட்டிருப்பதாக அண்ணாமலை என்பவர் புகாரளித்தார்.
அதன்பேரில் முன்னாள் தலைமை ஸ்தபதி முத்தையா, இந்து அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் கவிதா, முன்னாள் ஆணையர் வீரசண்முகமணி உள்பட 10 பேர் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். மேலும் கவிதாவை பணியிடை நீக்கம் செய்து இந்து அறநிலையத் துறை உத்தரவிட்டது.
இந்நிலையில் இவ்விவகாரத்தில் தேடப்பட்டு வந்த ஏகாம்பரநாதர் கோயில் அர்ச்சகர் ராஜப்பா நேற்று இரவு மும்பை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். ஏகாம்பரநாதர் கோயில் சிலை செய்ததில் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ள ராஜப்பாவை அவரது வயதை காரணம் காட்டி சிறப்பு புலனாய்வுக் குழு அவரது கைது நடவடிக்கையை தள்ளி போட்டது.
ஆனால் உயர்நீதிமன்ற முன் அனுமதி இல்லாமல் ராஜப்பா கள்ளத்தனமாக கனடா நாட்டிற்கு சென்று வந்துள்ளார். இதனால் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்ட சிறப்பு புலனாய்வுக் குழு ராஜப்பா கனடாவில் இருந்து திரும்பியபோது மும்பை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து ராஜப்பாவை இரவு குப்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.
முன்னதாக ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள சோமாஸ்கந்தர் சிலையை வெளிநாட்டிற்கு கடத்த இருந்ததாக உயர்நீதிமன்றத்தால் நியமிக்கபட்ட குழுவின் விசாரனையில் கட்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இதே கோயிலில் 15 ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசால் வழங்கப்பட்ட மற்றொரு சோமாஸ்கந்தர் சிலையை வெளிநாட்டிற்கு கடத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.