‘கத்துக்குட்டி’, ‘உடன் பிறப்பே’ ஆகிய படங்களைத் தொடர்ந்து இரா.சரவணன் எழுதி, இயக்கியிருக்கும் அவருடைய மூன்றாவது படம்தான் “ நந்தன்”. இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
இதில், இயக்குநரும் நடிகருமான சசிகுமார், பாலாஜி சக்திவேல், நிலா துரை சுதாகர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். அயோத்தி’, ‘கருடன்’ என அடுத்தடுத்து இரண்டு வெற்றிகளைக் கொடுத்திருக்கும் சசிகுமார் நடிப்பில் விரைவில் இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில்தான், “நந்தன் “ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் கவனத்தை பெற்றுள்ளது.. இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவானது நேற்று (13.9.2024) சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர்கள் எச்.வினோத், ரோகின் வெங்கடேசன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்.
இதில், பங்கேற்ற இயக்குநர் எச். வினோத் ”நந்தன்” திரைப்படம் குறித்து பேசுகையில், ”என்னை பொறுத்தவரை எது நல்லப்படம் என்றால்.. பெரிய பட்ஜெட்ல பண்ணுகிற படமோ, பெரிய ஹீரோவை வைத்து பன்னுகிற படமோ, பெரிய பாக்ஸ் ஆஃபீஸ் படமோ கிடையாது. ஒரு மனிதனை சிறந்த மனிதனாக மாற்றவோ அல்லது மாற்ற முயற்சி செய்கின்ற படங்கள்தான் நல்ல படங்கள்..
இந்தவகையில், நந்தன் திரைப்படம் நம்மை நல்ல மனிதனாக மாற்ற முயற்சி செய்கிறது. இரா. சரவணன் பத்திரிக்கை துறையிலிருந்து வந்தவர் என்பதாலோ.. சசிக்குமார் பொருட்காட்சியில் வைத்து பாதுகாக்கின்ற அளவிற்கு நல்லவர் என்பதற்காகவோ இந்த கருத்தை நான் கூறவில்லை.. இது உண்மையாக சிறந்த திரைப்படம் .. அனைவரும் இதற்கு ஆதரவு கொடுங்கள்.” என்று தெரிவித்துள்ளார்.
சீமான்.. ”நந்தனார் சரித்தரித்திலே.. 63 நாயன்மார்களில் ஒருவர்தான் நந்தன். எவருக்கு குறைவில்லாத சிவன் பக்தன் இவர்.. இவர் சிவனை வழிபட தவிக்கிறார்.. எல்லோரும் உள்ளே சென்று வழிபடுகிறார்கள்.. அப்பொழுது நந்தி உள்ளே நின்று நந்தன் சிவனை வழிபடுவதை மறைக்கிறது.. இதை பார்த்த சிவன்.. நந்தியை நகர்த்தி வைத்தார் என்பது வரலாறு.
நந்தியை நகர்த்தி வைத்த சிவன் , “நந்தா உள்ளே வா” என்று ஏன் கூப்பிடவில்லை?... இந்த கேள்வி எழுமா ? எழாதா? . ஆக, இறைவனுக்கும் தீண்டாமை இருந்ததா? .. பாகுபாடு பார்த்தாரா?.. இந்த கேள்விதான் படம்..
பெரியாருக்கு எல்லோருக்கும் தந்தையாக இருக்கும்போது.. பாரதி எனக்கு பாட்டனாக இருப்பதில் என்ன பிரச்னை. எனது அண்ணன் கமல் என்னிடத்தில் தனிப்பட்ட முறையில் பேசுகையில், ”நான் குளிக்காமல் ரெக்கார்டிங் தியேட்டர் செல்வேன், அசைவம் சாப்பிடுவேன், சாமி கும்பிட மாட்டேன்.
ஆனால், இதை எதுவே செய்ய மாட்டார் இளையராஜா.. குளித்து விட்டுதான் வருவார்.. அசைவம் சாப்பிடமாட்டார், சாமி கும்பிடுவார்.. எல்லாம் செய்வார். ஆனால், அவர் பறையன் . நான் ஐயன்.” என்றார். இந்த வேறுபாடு புரிகிறதா? சமூகம் எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது என்று புரிகிறதா? இதில் யார் உயர்ந்தவர்.. எதன் அடிப்படையில் நாம் இதை பார்க்கிறோம்.
”ஆடு குளித்து செல்கிற இடத்திலே சக மாடு குளித்து செல்கிறது.. ஆனால், இந்த மனிதன் குளித்து செல்லக்கூடாதா?” என்ற வரியை நீங்கள் புரிந்து கொண்டால்.. இந்த படம் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்..
இந்த வலியின் மொழிதான் நந்தன் என்ற காவியம்.. வலி இருந்தால் படத்தோடு பொருந்திவிடுவீர்கள்.. அது உங்களை பாதிக்கும்.. இல்லையெனில் இந்த படம் உங்களுக்கு போதிக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இப்படம் குறித்து நடிகர் சூரியும்,” படம் பார்த்து பல மணி நேரங்கள் ஆகிறது . நந்தன் தந்த பிரமிப்பு இன்னும் அகலவில்லை! என்று சமீபத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. பின்னர் பாலாஜி சக்திவேல், சசிகுமார் உள்ளிட்டோர் பேசினர்.