தமிழ்நாடு

பொன்விழா கொண்டாடும் தமிழ்நாடு

webteam

மதராஸ் மாகாணம் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டதன் 50-ஆம் ஆண்டு பொன் விழாவை கொண்டாடுகிறது தமிழ்நாடு அரசு.

தமிழக அரசு சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மாவட்டம் தோறும் நடத்தப்பட்டது. இந்நிலையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா சென்னையில் இன்று நடைபெறுகிறது. இதில் “தமிழ்நாடு” என பெயர் மாற்றம் செய்யப்பட்டு 50-ஆம் ஆண்டு நிறைவு பெற்றதையடுத்து தமிழ்நாடு அரசு "பொன்விழா" ஆண்டாகவும் கொண்டாடுகிறது. எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் தமிழ்நாடு 50ஆம் ஆண்டு பொன்விழா சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இன்று மாலை 4 மணிக்கு சட்டப்பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் என பலர் கலந்து கொள்கின்றனர். 

தமிழ்நாடு பெயர் மாற்றத்தின் வரலாறு

சுதந்தர இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட 1956ஆம் ஆண்டு ஜூலை 27இல் "மெட்ராஸ் ஸ்டேட்" என அழைக்கப்பட்ட நிலப்பரப்பை "தமிழ்நாடு" என மாற்றக்கோரி விருதுநகரில் உண்ணாவிரதத்தை தொடங்கினார் சங்கரலிங்கனார்". தனது 78 வயதிலும் தொடர்ந்து பட்டினிப் போராட்டம் நடத்திய சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் தொடங்கி 76ஆவது நாளான 1956 அக்டோபர் 13இல் உயிர்நீத்தார். தமிழகத்தின் நில எல்லையை ''வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகம்'' என்ற தொல்காப்பிய வாசகத்திலும், தமிழ்நாட்டின் பெயரை ''இமிழ்கடல் வேலியை தமிழ்நாடாக்கின'' என்ற இளங்கோவடிகளின் வாசகத்திலும் "தமிழ்நாடு" என்ற பெயர்காரணத்தை சங்ககாலம் தொட்டே அறிய இயலும்.

1967ஆம் ஆண்டு பொறுப்பேற்ற அண்ணா தலைமையிலான திமுக அரசு தியாகி சுந்தரலிங்கனாரின் தியாகத்தை நிறைவேற்றும் வகையில் 1968ஆம் ஆண்டு ஜுலை 18 ஆம் தேதி மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரை தமிழ்நாடு என பெயர் மாற்றி பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது. அதே ஆண்டு நவம்பர் மாதம் தமிழக அரசின் பெயர் மாற்றத் சட்ட முன்வடிவு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இப்படி தான் அறிஞர் அண்ணா அவர்களால் மதராஸ் மாகாணம் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.