தமிழ்நாடு

டிவி பழுதுபார்க்க வந்து பாலியல் தொல்லை : இளம் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்

webteam

கன்னியாகுமரியில் பாலியல் தொல்லையால் தீக்குளித்து உயிரிழந்த இளம் பெண்ணின் உறவினர்கள் குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என போராடினர்.

கன்னியாகுமரி மாவட்டம் வாழபழஞ்சி பகுதியை சேர்ந்தவர் ஆயிஷா (22, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கடந்த 11ஆம் தேதி அன்று திடீரென தீக்குளித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பலத்த தீக்காயத்துடன் சிகிச்சை பெற்றுவந்த அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் தான் ஏன்? தீக்குளித்தேன் என்பதை அப்பெண் தெரிவித்தார். தனது வீட்டில் டிவி பழுது என்பதால், ஆயிஷா அருகாமையில் இருந்த வீட்டில் குடியிருந்த தனது உறவினர் ராஜேஷிடம் உதவி கேட்டுள்ளார். அதற்கு ராஜேஷ் தானே டிவியை சரிபார்ப்பதாகக் கூறியுள்ளார். ஆயிஷாவின் வீட்டிற்கு வந்து டிவியை சரிசெய்வதுபோல் பார்த்துக்கொண்டிருந்த ராஜேஷ், திடீரென ஆயிஷாவிடம் அத்துமீறியுள்ளார். பாலியல் தொல்லையால் அதிர்ச்சியடைந்து அப்பெண் சத்தம்போட, ராஜேஷ் உடனே அங்கிருந்து வெளியே சென்றுவிட்டார். இந்த சம்பவம் ஆயிஷாவிற்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மீண்டும் வந்த ராஜேஷ் ஆயிஷாவிடம், பாலியல் தொல்லை தொடர்பாக வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்துச்சென்றுள்ளார். மன உளைச்சலுடன் இருந்த அப்பெண், இந்த மிரட்டலால் விரக்தி அடைந்து தீக்குளித்துள்ளார். இந்த சம்பவம் முழுவதையும் காவல்துறையினரிடம் வாக்குமூலமாக ஆயிஷா தெரிவித்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் மாஜிஸ்திரேட்டுக்கு தகவல்கொடுக்க, அவர் மருத்துவமனைக்கே வந்த ஆயிஷாவிடம் வாக்குமூலத்தை பெற்றுக்கொண்டார். ஆனால் ராஜேஷ் தலைமறைவாகிவிட்டதால் அவரை இதுவரை காவல்துறையினர் கைது செய்யவில்லை. இந்த சூழலில் ஆயிஷா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த ஆயிஷாவின் உறவினர்கள் ராஜேஷை கைது செய்ய வேண்டும் என காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அத்துடன் காவல்துறையினரின் வாகனத்தையும் முற்றுகையிட்டனர். இதையடுத்து கண்டிப்பாக ராஜேஷ் மீது நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதியளித்தனர். ராஜேஷிற்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.