தமிழ்நாடு

ஆன்லைனில் செல்போன் விற்பவர்களை குறிவைக்கும் மோசடி நபர் 

webteam

சென்னையில் ஆல்லைனில் விலை உயர்ந்த செல்போன்களை விற்க விளம்பரம் செய்யும் தனிநபர்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்ட வந்த நபரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

முகப்பேர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் ராஜ் என்பவர் தனது விலையுயர்ந்த செல்போனை விற்பனை செய்ய ஆன்லைனில் விளம்பரம் செய்திருந்தார். இந்த விளம்பரத்தை பார்த்த ஹரிபிரசாத் என்பவர், செல்போனை வாங்கிக் கொள்வதாகக்கூறி தனியார் உணவகத்திற்கு அழைத்துள்ளார். இதையடுத்து அங்கு சென்ற விக்னேஷ் பெண் ஒருவருடன் அமர்ந்திருந்த ஹரிபிரசாத்திடம் செல்போனைக் கொடுத்துள்ளார். செல்போனை பரிசோதிப்பது போல உணவகத்திற்கு வெளியே சென்ற ஹரி அங்கிருந்து காணாமல் போய்விட்டார். 

இதையடுத்து உணவகத்தில் ஹரியுடன் இருந்த பெண்ணை விசாரித்த போது, அவரையும் ஆன்லைன் பிராஜெக்ட் கொடுப்பதாக ஏமாற்றி வரவழைத்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து விக்னேஷ் ராஜ் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் ஹரியை தேடி வந்தனர். சிசிடிவி காட்சிகளை வைத்து ஹரி பிரசாத்தைக் கைது செய்த காவல்துறையினர், 8 சவரன் நகை மற்றும் 90 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான உயர்ரக செல்போனையும் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.