சென்னையில் அடையாறு ஆற்றில் நண்டு பிடிக்க சென்று தண்ணீருக்கு நடுவில் சிக்கிக் கொண்ட குடும்பத்தை நான்கு மணி நேரத்திற்கு பிறகு தீயணைப்பு மற்றும் மெரினா உயிர் பாதுகாப்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஆதிகேசவன் - செல்வி தம்பதி தனது குடும்பத்துடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை அடையாறு பகுதியில் தங்கி கட்டட வேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று மதியம் ஆதி கேசவன் மற்றும் அவரது மனைவி செல்வி ஆகியோர் இருவரும் நண்டு பிடிப்பதற்காக அடையாறு ஆற்றுப் பாலம் அருகே சென்றுள்ளனர்.
மார்பளவு தண்ணீரில் சென்று கொண்டிருந்த போது திடீரென தண்ணீர் அளவு அதிகரித்து இருவரும் தண்ணீரில் சிக்கிக் கொண்டனர். பின்னர் ஒரு வழியாக தண்ணீருக்கு நடுவில் இருந்த ஒரு சிறிய மணற்திட்டில் ஏறினர். உயிர்பிழைத்தபோதிலும், ஆற்றை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். நீண்ட நேரமாக, தாய் தந்தையர் இருவரும் வீட்டிற்கு திரும்பாததால் 24 வயதான அவர்களது மகன் குமார் என்பவர் ஒரு சிறிய படகை எடுத்துக் கொண்டு தாய் தந்தையரை காப்பாற்றுவதற்காக சென்றுள்ளார்.
ஆனால், தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் தாய் தந்தையரை அவரால் மீட்டுக் கொண்டு வர இயலவில்லை. இதனையடுத்து செல்போன் மூலமாக தீயணைப்பு துறைக்கு குமார் தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற மெரினா உயிர் பாதுகாப்பு குழுவினர் மற்றும் அடையாறு தீயணைப்புத் துறையினர் போராடி தாய், தந்தை மற்றும் மகனை பத்திரமாக மீட்டுக் கொண்டு வந்தனர்.