Velmurugan Family pt desk
தமிழ்நாடு

“கந்துவட்டிக் கொடுமை தாங்க முடியல... கருணை கொலை செய்துவிடுங்கள்” - ஆட்சியரிடம் மனு அளித்த தம்பதியர்

நிலக்கோட்டை அருகே கந்துவட்டிக் கொடுமையால் பாதிக்கப்படும் தங்களை கருணை கொலை செய்ய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த குடும்பம்

PT WEB

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா அருகே உள்ள சக்கிலியவளவு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வேல்முருகன் - வினிதா தம்பதியர். பட்டதாரியான இவர்களுக்கு நான்கு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

வேல்முருகனுக்கு அரசு வேலை கிடைக்காத நிலையில், சுயமாக தொழில் செய்யலாம் என முடிவு செய்து கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு விருவீடு அருகே உள்ள நாயக்கக் கவுண்டன்பட்டியைச் சேர்ந்த பரமேஸ்வரி என்பவரிடம் மூன்று லட்சம் ரூபாயை 4 வட்டிக்கு கடனாக வாங்கியுள்ளார்.

Collector Office

கடனாக பெற்ற பணத்தைக் கொண்டு 5 கறவை மாடு வாங்கி பால் வியாபாரம் செய்து வந்துள்ளார். இதையடுத்து முதல் மாத வட்டி தொகை கொடுக்க சென்றபோது உங்களுக்கு நான்கு வட்டி கிடையாது பத்து வட்டி என பரமேஸ்வரி சொல்லியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து வேறு வழி இல்லாமல் கடனாக பெற்ற மூன்று லட்சத்திற்கு மாதந்தோறும் ரூ.30 ஆயிரம் வட்டி கட்டி வந்திருக்கிறார்.

இதனிடையே கணவன் மனைவி இருவரும் கொரோனா தொற்று தாக்குதலுக்கு உள்ளானதால் தொடர்ந்து அவர்களால் வட்டி பணம் செலுத்த முடியாமல் போயுள்ளது. பின் போராடி போராடி வட்டி செலுத்தியுள்னர். இப்படியாக கடனாக வாங்கிய மூன்று லட்சத்திற்காக, கடந்த இரண்டு வருடத்தில் வட்டியாக ரூ.11 லட்சம் கட்டியுள்ளார்.

தற்போது கடன் பாக்கி 8 லட்சம் ரூபாய் உள்ளது எனக் கூறி ஆட்களை வைத்து மிரட்டி வெற்று பத்திரத்தில் 8 லட்சத்திற்கு பரமேஸ்வரி எழுதி வாங்கியுள்ளார். மேலும் கடனாக பெற்ற பணத்தை திருப்பிச் செலுத்த முடியவில்லை என்றால் கொத்தடிமையாக கணவன் மனைவி இருவரும் தனது வீட்டில் வேலை பார்க்கும் படி பரமேஸ்வரி கூறியுள்ளார்.

Press Meet

மேலும் ஊர் மக்கள் மத்தியில், வேல்முருகனின் சாதியை குறிப்பிட்டு மோசமான வார்த்தைகளால் பரமேஸ்வரி திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார் என்று குற்றஞ்சாட்டுகிறார் வேல்முருகன்.

பரமேஸ்வரியின் நடவடிக்கைகளால் மனமுடைந்த வேல்முருகன், வினிதா ஆகியோர் தங்களது குழந்தைகளுடன் இன்று (ஏப்.,24) திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மாவட்ட ஆட்சியர் விசாகனிடம் மனு ஒன்றை அளித்தனர்.

அதில் “கந்துவட்டிக் கேட்டு கொடுமை செய்யும் பரமேஸ்வரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் குடும்பத்துடன் எங்களை கருணை கொலை செய்ய வேண்டும்” என வேண்டுகோள் வைத்திருக்கிறார். இதையடுத்து இந்த மனு மீது விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.