அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணி பெண்கள் சிகிச்சை பெற்றுக்கொள்ள வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, ஆத்தூர் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலே குழந்தை பெற்றெடுத்த பெண் மருத்துவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
பொதுவாகவே அரசு மருத்துவமனைகளில் குழந்தை பெற்றுக்கொள்வதை விட, தனியார் மருத்துவமனைகளில் குழந்தை பெற்றுக்கொள்ளும் வழக்கமும், தொடர்ந்து தனியார் மருத்துவமனைகளிலேயே சிகிச்சை பெற்றுக்கொள்ளும் முறைகளும் இருந்துவருகின்றன. அதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆத்தூரை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர், கர்ப்பிணி பெண்களுக்கு அரசு மருத்துவமனைகளில் நம்பிக்கை ஏற்படுத்துவதற்காகவும், தொடர்ந்து அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொள்ளவேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தை பெற்றுக்கொண்டுள்ள சம்பவம் அனைவரது பாராட்டுக்களையும் பெற்றுவருகிறது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் கெங்கவல்லி அருகே உள்ள கூடமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 5 ஆண்டுகளாக மருத்துவ அலுவலராக பணியாற்றி வருபவர் ஹர்ஷிதா (31). இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையை சேர்ந்த மருத்துவர் புகழ் என்பருடன் திருமணம் நடைபெற்றது. கர்ப்பிணியான ஹர்ஷிதா தான் பணியாற்றும் மருத்துவமனையிலேயே தொடர்ந்து பரிசோதனை சிகிச்சையை மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில், கடந்த 20ஆம் தேதி அவருக்கு பிரசவவலி ஏற்பட்டதும், குழந்தை பெற்றுக்கொள்ள தனியார் மருத்துவமனையை நாடாமல், தான் பணியாற்றிய கூடமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார். 21ஆம் தேதி அவருக்கு சுக பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது.
இதனையடுத்து மருத்துவரின் இந்த விழிப்புணர்வு நடவடிக்கையை கண்டு மற்ற மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சகபணியாளர்கள் என அரசு மருத்துவர் ஹர்ஷிதாவுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.