தமிழ்நாடு

உஷார் மக்களே... சென்னை ஹோட்டலில் ஆபாச விளம்பரம்: காவல்துறை சொன்ன அதிர்ச்சி விளக்கம்!

நிவேதா ஜெகராஜா

சென்னை சின்னமலையிலுள்ள சாலையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இரு தினங்களுக்கு முன், ஆட்சேபனைக்குரிய விளம்பரப்பலகையொன்று வைக்கப்பட்டிருந்தது. அதில் சட்டத்துக்கு புறம்பாக, பாலியல் தொழில் தொடர்பான விளம்பரம் இருந்தது.

இதை கண்ட செயற்பாட்டாளர் கவிதா ராஜேந்திரன், ட்விட்டரில் அதை பதிவிட்டு சென்னை காவல்துறையை டேக் செய்திருந்தார். தன் பதிவில் அவர், `இப்படியொரு விளம்பரம் எப்படி சென்னையில் இருக்கலாம்? உடனடியாக இதுதொடர்பாக சென்னை காவல்துறை, போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுக்கவும்’ என பதிவிட்டு, எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் முதல்வர் ஸ்டாலின் ஆகியோரை டேக் செய்திருந்தார்.



இந்தப் பதிவை கண்டு, குறிப்பிட்ட அந்த விளம்பரத்துக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இதை எப்படி காவல்துறை கவனிக்காமல் இருந்தது என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில், இதுதொடர்பாக தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்கீழ் தற்போது அந்த விளம்பர பலகை அங்கிருந்து நீக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியாகியுள்ள காவல்துறை அறிக்கையில், “டிஜிட்டல் விளம்பர பலகையான அது, அடையாளம் தெரியாத நபர்களால் தொழில்நுட்பம் மூலம் ஹேக் செய்யப்பட்டுள்ளது.  ஓபன் Wi-Fi எனப்படும் பாஸ்வேர்டு இல்லாத இண்டர்நெட் கனெக்‌ஷன் அந்த ஹோட்டலில் இருந்துள்ளது. இதனால் அது எளிதில் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அதன்மூலமே அறிவிப்பு பலகையில் தகவல்கள் மாற்றப்பட்டுள்ளன என ஹோட்டல் உரிமையாளர் கூறியுள்ளார்.

பொது இடங்களில் பாஸ்வேர்டு இல்லாத Wi-Fi சேவையை வழங்குவதிலுள்ள ஆபத்துகளை அறிந்து தனிநபர்களும், நிறுவனங்களும் செயல்பட வேண்டும். விழிப்புணர்வோடு Strong Wi-Fi Password வைத்து அனைவரும் செயல்படவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். மேலும் சம்பந்தப்பட்ட ஹோட்டலில் விளம்பரத்தில் இருந்ததுபோல எந்த சட்டவிரோத செயல்களும் நடைபெறவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேற்கொண்டு முழுமையாக விசாரித்து வருகிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது