ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் புகழ்பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளை கொரோனா தடுப்பு வழிமுறைகளுடன் நடத்துவது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின்போது, விழாக் குழுவினர் போட்டிக்கான அழைப்பிதழை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். விழா கமிட்டியினர், காவல்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனையில் பங்கேற்றனர். கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி பார்வையாளர்களை அனுமதிப்பது, காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி வழங்கும் முறை தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இதனிடையே, மதுரை மாவட்டம் முழுவதும் 95 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்றும் காளைகளுக்கு தகுதி சான்று வழங்கும் பணி இன்று தொடங்குகிறது.
இதையும் படிக்க: “சில கட்டுப்பாடுகளுடன் மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும்” -அமைச்சர் மூர்த்தி உறுதி