தமிழ்நாடு

இவர் ரியல் ஹீரோங்க... யாசகர்களுக்கு உதவும் கல்லூரி பேராசிரியர்!

இவர் ரியல் ஹீரோங்க... யாசகர்களுக்கு உதவும் கல்லூரி பேராசிரியர்!

EllusamyKarthik

நம் எல்லோரது வாழ்விலும் அடிக்கடி யாசகர்களை கடந்து செல்வதுண்டு. சமயங்களில் நம் கைகளில் இருக்கும் சில்லறைகளை கொடுத்துவிட்டு அவரவர் வேலையை பார்த்துக்கொண்டு நகர்ந்து விடுவோம். ஆனால் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த கல்லூரி பேராசிரியரான நவீன் குமார் அப்படியில்லை. யாசகர்களின் வாழ்வில் மாற்றம் கொண்டு வரும் நோக்கில் செயல்பட்டு வருகிறார். 

இந்தியாவில் யாசகர்களே இருக்கக்கூடாது என்ற பெருங்கனவு கொண்டுள்ள அவர் அதற்காக அட்சயம் என்ற அறக்கட்டளையை நிறுவியுள்ளார். 

“இதெல்லாம் நான் பொறியியல் பட்டம் படித்தபோது ஆரம்பமானது. அப்போது யாரேனும் யாசகம் கேட்டு வந்தால் என் கையில் உள்ள காசை கொடுத்து உதவுவேன். எங்கள் குடும்பம் பொருளாதார ரீதியாக பின்தங்கியது என்பதால் பல நாட்கள் அடுத்தவர்களுக்கு உதவி செய்ததால் பட்டினியோடு படுத்து தூங்கிய அனுபவங்களும் எனக்கு உண்டு. 

அப்போது அதுபோல யாசகம் கேட்டு வருபவர்களுக்கு நம்மால் முடிந்த உதவியை செய்ய  வேண்டுமென்ற உந்துதல் எனக்குள் பிறந்தது. அதற்காக நண்பர்கள், ஆசிரியர்கள் என பலரிடமும் உதவி கேட்டுள்ளேன். ஆனால் எல்லோரும் எனது முயற்சியை தட்டிக் கழித்தனர். 

படிப்பை முடித்து நான் படித்த கல்லூரியிலேயே பேராசிரியராக சேர்ந்ததும் யாசகர்களுக்காக உதவ தொடங்கினேன். அவர்கள் யாசகம் எடுப்பதற்கான காரணம் என்ன? என்பதில் ஆரம்பித்து அனைத்திற்கும் தீர்வு காண முயன்றேன்.

வேலைக்கு செல்ல விரும்புபவர்களுக்கு வேலை, குடும்பத்தோடு சேர விரும்புபவர்களை குடும்பத்தோடும் ‘அட்சயம்‘ சேர்த்து வருகிறது. இதற்காக தன்னார்வ உதவியாளர்களும் உள்ளனர். அவர்கள் மூலமாக இதை செய்து வருகிறோம். 

சுமார் 5000 பேருக்கு மறுவாழ்வு, 600 பேருக்கு நல்ல வேலையும் அட்சயம் பெற்றுக் கொடுத்துள்ளது. தற்போது சிறியதாக மறுவாழ்வு மையமும் நாங்கள் அமைத்துள்ளோம். இங்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சிகிச்சை கொடுத்து வருகிறோம்” என்கிறார் நவீன் குமார். 

கடந்த 2018இல் அவரது பணியை பாராட்டி தேசிய இளைஞர் விருதையும் இந்திய அரசு வழங்கியுள்ளது.