தமிழ்நாடு

கோமா நிலைக்கு சென்ற குழந்தை உயிரிழப்பு! மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு பெற்றோர் தலைமறைவு!

கோமா நிலைக்கு சென்ற குழந்தை உயிரிழப்பு! மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு பெற்றோர் தலைமறைவு!

webteam

ஆலங்குளத்தில் இரண்டரை வயது சிறுமி கோமாக்கு சென்றதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி தற்போது குழந்தை உயிரிழந்துள்ளது. இந்நிலையில் குழந்தையை மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு தலைமறைவான கல்நெஞ்சம் கொண்ட பெற்றோரை போலீசார் தேடிவருகின்றனர்.

ஆலங்குளம் அண்ணாநகர் 3ஆவது தெரு 3 வது சந்து பகுதியில் சென்னை பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்ற திலீப் குமார், ஹேமலதா ஆகியோர், ஹாசினி என்ற இரண்டரை வயது குழந்தையுடன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்தனர். சக்திவேல் காய்கனிச் சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளியாகவும், ஹேமலதா தாலுகா அலுவலகம் எதிரே உள்ள தனியார் ஜவுளிக் கடையிலும் வேலை செய்து வந்தனர்.

புதிதாக குடியிருப்பு பகுதிக்கு வந்த நிலையிலும், குழந்தை ஹாசினி 6 மாதங்களிலிலேயே இப்பகுதியில் வசிப்பவர்களை தனது மழலைக் குரலால் பேசி தன் பக்கம் ஈர்த்துள்ளார். அக்கம் பக்கத்தினரும் குழந்தையிடம் மிகவும் அன்பாக நடந்துள்ளனர். அத்தெருவில் வசிப்பவர்களுக்கு செல்லப்பிள்ளையாகவே மாறிப்போனார் ஹாசினி.

இந்நிலையில், குழந்தை ஹாசினி கடந்த டிச.31ஆம் தேதி வீட்டில் தவறி விழுந்ததாகக் கூறி ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் பெற்றோர் அனுமதித்தனர். குழந்தை சுய நினைவின்றி காணப்பட்டதால் அங்கு முதலுதவிக்குப் பின்னர், மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கடந்த 4 தினங்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சகிச்சை பெற்று வந்தார்.பெற்றோர் இருவரும் மருத்துவமனையில் குழந்தையுடன் இருந்த நிலையில், திடீரென யாரிடமும் சொல்லாமல், போலீசாரிடமும் தகவல் தெரிவிக்காமல் தமைமறைவாகிவிட்டனர்.

சம்பவத்தை தொடர்ந்து ஆலங்குளம் போலீசார் இது உண்மையிலேயே இவர்களின் குழந்தை தானா?, இவர்கள் அளித்த பெயர் விவரங்கள் உண்மைதானா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்த நிலையில், இன்று காலை அந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்போதும் அந்த குழந்தையின் பெற்றோர் குழந்தையை தேடிவரவில்லை, போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர்.