மிக்ஜாம் புயல், மழை பாதிப்புகளை மதிப்பீடு செய்ய மத்திய குழு நாளை தமிழகம் வருகிறது.
சேதங்களையும், அதில் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நிவாரணப் பணிகள் பற்றியும் நேரடியாக சென்று அறிந்து மதிப்பிடுவதற்காக குழு ஒன்றை அனுப்ப உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையிலான இந்த குழுவில் மத்திய வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, நிதித்துறை, மின்சாரத் துறை, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.
புயல், மழை வெள்ள பாதிப்புகள் மதிப்பிடும் செய்யும் இந்த குழு, தமிழக அரசின் தலைமைச் செயலாளருடன் ஆலோசனை நடத்துகிறது. பின்னர் டெல்லி திரும்பும் மத்திய குழு, ஒரு வாரத்திற்குள் பாதிப்பு குறித்த மதிப்பீடு அறிக்கையை தாக்கல் செய்யும் என கூறப்படுகிறது. புயல், மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு தமிழகம் வரவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது.
முன்னதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புயல், மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை ஹெலிகாப்டர் மூலம் கடந்த 7ஆம் தேதி பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது.