போக்குவரத்திற்கு இடையூறாக தேர்தல் பரப்புரை மேற்கொண்டதாக அதிமுக வேட்பாளர் மனோஜ்பாண்டியன் மீது வள்ளியூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மக்களவை தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையோடு நிறைவு பெறும் நிலையில், அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் அதிகாலை முதல் தீவிர பரப்பரை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நெல்லை நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் மனோஜ்பாண்டியன் தனது ஆதரவாளர்களுடன் வள்ளியூர் பகுதிகளில் பரப்புரையில் ஈடுபட்டு வந்தார். அவர் மேற்கொண்ட பரப்புரையால் அப்பகுதியில் போக்குவரத்து முடங்கியதாக தெரிகிறது.
அப்போது போக்குவரத்திற்கு இடையூறாக பரப்புரை மேற்கொண்டதாக தேர்தல் விதிமுறை நிலையான கண்காணிப்பு குழு அலுவலர் மனோகரன் புகார் அளித்தார். அடிப்படையில் வள்ளியூர் காவல்துறையினர் மனோஜ் பாண்டியன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர் மட்டுமின்றி தமிழகத்தின் பல இடங்களிலும் பிரச்சாரக் கூட்டங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக, மக்கள் ஆங்காங்கே அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.