தமிழ்நாடு

செல்லம்மா பாரதி மீது வெளிச்சம் பாய்ச்சும் புதிய புத்தகம்

செல்லம்மா பாரதி மீது வெளிச்சம் பாய்ச்சும் புதிய புத்தகம்

webteam

மகாகவி பாரதியாரின் 137ஆவது பிறந்தநாள் இன்று. பாரதியின் கவிதைகளைச் சேகரித்து இவ்வுலகிற்கு வழங்கியவர்களில் ஒருவர் அவரது மனைவி செல்லம்மா. வள்ளுவனுக்கு வாசுகி போல, பாரதிக்கு செல்லம்மா என்றும் கூறுவர். செல்லம்மாவை பற்றி "பாரதியின் செல்லம்மா" என்ற பெயரில் புத்தகம் எழுதியிருக்கிறார் புலவர் வெய்கைமுத்து. அதிகம் பேசப்படாத செல்லம்மாவை பற்றி பேசுகிறது இந்தப் புத்தகம்.

மேற்குத் தொடர்ச்சி மலையே எல்லையாய் இருக்க, அதன் அடி வரை நீண்டிருக்கிறது பச்சைப் படர்ந்த வயல்வெளி. சத்தமிட்டுக் கொண்டே ஓடும் ஒரு சிற்றோடை. அதை ஓட்டியே நீண்டும் பருத்தும் கிடக்கும் குன்றுகள். பழமையான கோயில், அதனருகே அழகிய குளம். இப்படி திரும்பிய பக்கமெல்லாம் இயற்கை அழகு கொட்டி கிடக்கும் இடம்தான் நெல்லை மாவட்டத்தில் இருக்கும் கடையம். பாரதியாரின் மனைவி செல்லம்மா பிறந்த ஊர். 

பாரதியார் எட்டயபுரத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் கடையத்தில் சிறிது காலம் மனைவியுடன் வசித்திருக்கிறார். ஊரில் உள்ள பல இடங்கள் பாரதி மற்றும் செல்லம்மாவின் நினைவுகளை இன்றும் சுமந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வோர் ஆணின் வெற்றிக்குப்பின்னும் ஒரு பெண் இருப்பாள். அதுபோல பாரதியின் வெற்றிக்குப்பின் இருந்தவர் செல்லம்மா. 

பாரதி கவிதை எழுத எழுதுகோலை எடுத்து வைப்பதில் இருந்து அவர் எழுதிய கவிதைகளை பத்திரமாக சேகரித்து உலகிற்கு தந்தது வரை செல்லம்மாவின் பணிப் பெரியது. பாரதியைக் கொண்டாடிய தமிழ்ச் சமூகம் செல்லம்மாவைப் பற்றி அதிகம் கவனிக்கவில்லை. அந்தக் குறையை போக்க முயன்றிருக்கிறார் கடையத்தைச் சேர்ந்த புலவரும் தமிழாசிரியருமான வெய்கைமுத்து. பாரதியின் செல்லம்மாவுக்கு நூல் வடிவில் மீண்டும் உயிர் கொடுத்திருக்கிறார் இவர்.

நூறு ஆண்டுகளுக்கு முன்பே பாரதியின் கனவு உயிர்ப்பெற துணை நின்றார் செல்லம்மா.‌ தனது மனைவியின் துணையுடன் அவருக்கு மட்டுமின்றி அனைத்துப் பெண்களின் விடுதலைக்காகவும் போராடினார் பாரதி. 100 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் செல்லம்மாக்களின் கனவுக்கு உயிர் கொடுப்பதே மகாகவி பிறந்தநாளில் அவருக்கு செய்யும் உண்மையான மரியாதை.