தமிழ்நாடு

நடுரோட்டில் கார் ஓட்டுநரை தாக்கிய வாலிபர் கைது - வீடியோ

நடுரோட்டில் கார் ஓட்டுநரை தாக்கிய வாலிபர் கைது - வீடியோ

webteam

சென்னையில் நடுரோட்டில் வாடகை கார் ஓட்டுநரை வழிமறித்து தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

கடந்த சனிக்கிழமை அதிகாலை தேனாம்பேட்டை, ஜி.கே மூப்பனார் பாலத்தின் அருகே வாடகை கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது சிவப்பு விளக்கை பார்த்து திடீரென காரின் ஓட்டுநர் பிரேக் பிடித்துள்ளார். 

இதனால், காரின் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரும் திடீரென பிரேக் பிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் காரின் முன்புறம் சென்று தனது வாகனத்தை நிறுத்தி தகராறு செய்தார். 

மேலும் கார் ஓட்டுநரை வெளியே வருமாறு கூறியதோடு அவரின் மீது தாக்குதல் நடத்தி கார் சாவியை பிடுங்கியுள்ளார். இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து போக்குவரத்து போலீசாருக்கு அனுப்பியுள்ளனர். 

இதையடுத்து போலிசார் வழக்கு பதிவு செய்து இருச்சக்கர வாகனத்தை அடையாளம் கண்டுள்ளனர். அதில் வாகன உரிமையாளர் பல்லாவரத்தை சேர்ந்த கார்த்திக் என்பது தெரியவந்தது. ஆனால் சம்பவம் நடந்த அன்று அவரது வண்டியை நண்பர் திலீப் குமார் எடுத்து சென்றதாக தகவல் தெரிவித்துள்ளார். 

இதைத்தொடர்ந்து திலீப் குமார் மீது பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல் சட்டம் 268-ன் படி வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.