தமிழ்நாடு

விவசாயத்திற்காக தோண்டிய குட்டையில் விழுந்த 9 வயது மகன்- காப்பாற்ற சென்ற தாயும் பலி

விவசாயத்திற்காக தோண்டிய குட்டையில் விழுந்த 9 வயது மகன்- காப்பாற்ற சென்ற தாயும் பலி

PT

தாராபுரத்திற்கு அருகே செயற்கை விவசாய குட்டை நீரில் வழுக்கி விழுந்த மகனை காப்பாற்ற சென்ற போது தாயும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த கோவிந்தாபுரம் கிராமம் சின்னக்கம்பாளையம் பிரிவு அருகே விவசாய தோட்டத்தில் வசிப்பவர் சக்திவேல் (35), இவரது மனைவி கலாமணி (27) இவர்களுக்கு வினூதட்சன் என்ற ஒன்பது வயது மகன் உள்ளார். வினு தட்சன் கோவிந்தாபுரத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறான். இன்று விடுமுறை தினம் என்பதால் காலை இவர்களது விவசாயத் தோட்டத்தில் செயற்கையாக அமைக்கப்பட்டிருந்த விவசாய பாசன நீர் குட்டையில் இயங்கிக் கொண்டிருந்த மின்மோட்டாரை ஆப் செய்வதற்காக கலாமணியும் மகன் வினுதட்சனும் சென்றுள்ளனர்.

அப்போது வினுதட்சன் பண்ணை குட்டையின் சுவர் மீது ஏறி உள்ளே எட்டிப் பார்த்தபோது தவறி தண்ணீரில் விழுந்தான். இதை பார்த்த கலாமணி மகனைக் காப்பாற்ற அவரும் நீர் குட்டையில் உள்ளே இறங்கினார் இதில் தாய் மகன் இருவரும் நிலை தடுமாறி குட்டை நீரில் மூழ்கி உயிரிழந்தனர். சம்பவத்தை சிறிது தொலைவில் இருந்து தண்ணீர் பாய்ந்து கொண்டிருந்த சக்திவேல் பார்த்துவிட்டு இருவரையும் காப்பாற்ற விரைந்து ஓடிவந்தும் பயன் இல்லாத நிலையில் இருவரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக பலியாகினர்.

சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் தாராபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தாய் மகன் இருவரது பிரேதங்களையும் கைப்பற்றி தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுமதித்துள்ளனர். 8 அடி உயரம் உள்ள தண்ணீரைத் தேக்கி வைத்த பண்ணை நீர் குட்டையில் தாயும் மகனும் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான சம்பவம் அப்பகுதி கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.