கீழடி புதிய தலைமுறை
தமிழ்நாடு

தோண்ட தோண்ட கிடைத்த அதிசயம்... கீழடியில் 9-ஆம் கட்ட அகழாய்வு நிறைவு

பத்தாம்கட்ட அகழ்வாய்வுக்கான பணிகள், அரசின் அனுமதி பெற்று தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Prakash J

தொல் தமிழர் வாழ்வில் புதுவெளிச்சம் பாய்ச்சும் கீழடியில் நடந்து வந்த ஒன்பதாம் கட்ட அகழ்வாய்வுப் பணிகள் இன்றுடன் நிறைவடைந்தன. பத்தாம் கட்ட அகழ்வாய்வுக்கான பணிகள், அரசின் அனுமதி பெற்று தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கீழடியில், வீரணன் என்பவருக்கு சொந்தமான 25 சென்ட் பரப்பளவிலான தென்னந்தோப்பில் 14 குழிகள் வெட்டப்பட்டு அகழ்வாய்வுப் பணிகள் நடைபெற்றன. கீழடியில் 9-ஆம் கட்ட அகழாய்வுக்காக தோண்டப்பட்ட குழிகளிலிருந்து சுமாா் 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய ஏராளமான அரியப் பொருட்கள் கண்டறியப்பட்டன.

இதில் தங்க அணிகலன், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சுடுமண்ணால் செய்யப்பட்ட விலங்கின உருவங்கள், சுடுமண்ணால் செய்யப்பட்ட தக்களிகள், ஆட்டக்காய்கள், வட்டச்சில்லுகள், கண்ணாடி மணிகள், அஞ்சனக்கோல்கள், செப்பு ஊசி, எலும்பினால் செய்யப்பட்ட கூர்முனைகள், இரும்பினால் செய்யப்பட்ட ஆணிகள் என 800-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் இதுவரை கண்டறியப்பட்டு உள்ளன.