தமிழ்நாடு

விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 924 வழக்குகள் பதிவு

விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 924 வழக்குகள் பதிவு

webteam

உச்சநீதிமன்ற உத்தரவின்படி அனுமதிக்கப்படாத நேரத்தில் பட்டாசு வெடித்ததாக தமிழகம் முழுவதும் 924 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழல் மாசுவை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில், தீபாவளியன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரையில் மொத்தம் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த அவகாசத்தை தளர்த்தக்கோரி தமிழக அரசு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இதனைதொடர்ந்து தமிழக அரசின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கவேண்டும். அது எந்த நேரம் என்பதை தமிழக அரசே முடிவு செய்யலாம் என்று உத்தரவிட்டது. இதனையடுத்து  தீபாவளி தினத்தன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்கலாம் என தமிழக அரசு அறிவித்தது. விதியை மீறிபட்டாசு வெடித்தால் 6 மாதம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 

இந்நிலையில் நேற்று கொண்டாடப்பட்ட தீபாவளி பண்டிகையில் விதிகளை மீறி அனுமதிக்கப்படாத நேரத்தில் பட்டாசு வெடித்ததாக தமிழகம் முழுவதும் 924 பேர் மீது காவல்துறையினர்‌ வழக்கு பதிவு செய்துள்ளனர். தலைநகர் சென்னையில் 69 வழக்குகளும், கோவையில் 100 வழக்குகளும், திருவள்ளூரில் 60 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 255 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. இதுதவிர மதுரை, நெல்லை, திருப்பூர், வேலூர், தஞ்சை, ஈரோடு, விருதுநகர், கடலூர், திருச்சி, பெரம்பலூர், திண்டுக்கல், கரூர், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தடை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.