தமிழ்நாடு

ஞாபகமே இல்ல சாமி’ - ரூ.33 ஆயிரம் பழைய நோட்டுகளை சேமித்து வைத்த 92 வயது மூதாட்டி

ஞாபகமே இல்ல சாமி’ - ரூ.33 ஆயிரம் பழைய நோட்டுகளை சேமித்து வைத்த 92 வயது மூதாட்டி

webteam

பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்த தகவல் தெரியாமல் 92 வயது மூதாட்டி 33 ஆயிரம் பழைய ரூபாய் நோட்டுகளை சேமித்து வைத்த தகவல் தெரியவந்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டம், பூமலூர் கிராமத்தைச் சேர்ந்த ரங்கம்மாள், தங்கம்மாள் என்ற சகோதரிகள் பணமதிப்பிழப்பு குறித்த தகவல் தெரியாமல் பழைய ரூபாய் நோட்டுக்களை தங்களது மருத்துவ சிகிச்சைக்காக சேர்த்து வைத்திருந்தனர். இதில், ரங்கம்மாள் கடந்த சில நாள்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார்.

இந்நிலையில் இதேபோன்ற மற்றொரு சம்பவம் கோவையில் நிகழ்ந்துள்ளது. கோவை கொண்டையம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 92 வயது மூதாட்டி கமலம்மாள். இவரது கணவர் ராஜ்வாலா இறந்து பல ஆண்டுகளாகிவிட்டன. இவர்களுக்கு இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

கமலம்மாள் சிறுக, சிறுக சேமித்தப் பணத்தை பீரோவில் வைத்துள்ளார். ரூ.33,000 சேமித்து வைத்திருக்கிறார். அதில் 51 பழைய 500 ரூபாய் நோட்டுக்களும், 6 ஆயிரம் ரூபாய்க்கு மற்ற நோட்டுகளும் உள்ளன. வயதாகி விட்டதால் கேட்கும் திறனை இழந்த மூதாட்டி கமலம்ம்பாள் வீட்டில் பணத்தை சேர்த்து வைத்தையே மறந்து போயுள்ளார்.

இதுகுறித்து கமலம்மாளின் மகன் கோபாலிடம் கேட்டபோது, “வயதாகிவிட்டதால் அம்மாவுக்கு சரியாக காது கேட்காது. பண மதிப்பிழப்பு நேரத்தில், நாங்கள் வெளியூரில் இருந்தோம். அம்மாவிடம் இதுப்பற்றி சொன்னபோது, ‘என்கிட்ட எங்கடா பணம் இருக்கு?. எதுவும் இல்ல’ என்று சொன்னார்.

இதனால், அப்போது நாங்களும் விட்டுவிட்டோம். பிறகு ஒருநாள் பீரோவை சுத்தப்படுத்திய போதுதான் பணம் இருப்பது எங்களுக்கு தெரியவந்தது. ஒரு புடவைக்குக் கீழ்தான் இந்த பணம் எல்லாம் இருந்தது. அம்மாவிடம் கேட்டதற்கு, ‘எனக்கு அது ஞாபகமே இல்ல சாமி’ என்றார். நாங்களும் பல இடங்களில் முயற்சி செய்து பார்த்துவிட்டோம். எதுவும் செய்ய முடியாது என்று கூறிவிட்டனர். இது அவர் சிறுக சிறுக சேமித்தப் பணம். எனவே, அரசுதான் இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.