தமிழ்நாடு

ஆசிரியர் திட்டியதால் மாணவர் தற்கொலை: கொந்தளித்த உறவினர்கள்

ஆசிரியர் திட்டியதால் மாணவர் தற்கொலை: கொந்தளித்த உறவினர்கள்

webteam

திருப்பூரில் ஆசிரியர் திட்டியதால் 8 ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்துகொண்டதாக மாணவனின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

திருப்பூர் மாவட்டம் மகாலட்சுமி நகரில் வசிக்கும் ராஜ்குமார் என்பவரது மகன் விவேகானந்தன். 8வகுப்பு படித்து வரும் இவர் வீட்டில் தனியாக இருந்த நிலையில் நேற்று இரவு தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார். ஆசிரியர்கள் திட்டியதே தன் மரணத்திற்கு காரணம் என அவர் கடிதம் எழுதி வைத்துள்ளார். அதில் ஒருநாள் உணவு இடைவேளையின் போது தனது நண்பர்களுடன் உணவருந்திவிட்டு தாமதமாக வந்த காரணத்தால் ஆசிரியர் விவேகானந்தனின் தந்தை எண்ணை வாங்கி வீட்டில் புகார் செய்வதாக திட்டியதாகவும், அப்போது அழுததால் விட்டுவிட்டதாகவும் எழுதியுள்ளார். ஆனால் மற்றொரு ஆசிரியர் தன் தந்தைக்கு போன் செய்து பேசியதாகவும் இச்சம்பவங்கள் தனக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியதால் தற்கொலை செய்துகொள்வதாகவும், இனியாவது தன் வகுப்பறையில் மாணவர்களை விளையாட விட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து மாணவரின் தற்கொலையால் ஆத்திரமடைந்த உறவினர்கள், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் தற்போது வரை நடவடிக்கை எடுக்காமல், காவல்துறை காலம் தாழ்த்துவதாகக் கூறி தாராபுரம் சாலையில் மாணவரின் உறவினர்கள் இன்று திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.