தமிழ்நாடு

8ஆவது சர்வதேச பலூன் திருவிழா! வானில் வட்டமடித்த பலூனில் பறந்து மகிழ்ந்த அமைச்சர்!

8ஆவது சர்வதேச பலூன் திருவிழா! வானில் வட்டமடித்த பலூனில் பறந்து மகிழ்ந்த அமைச்சர்!

webteam

பொள்ளாச்சியில் நடந்த பலூன் திருவிழாவை காண மக்கள் பெரிதும் ஆர்வம் காட்டியுள்ளனர். இந்நிலையில் பலம் திருவிழாவை பாரவையிட்ட சுற்றுலாத்துறை அமைச்சர், சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க அடுத்த ஆண்டு அதிகப்படியான பலூன்கள் பறக்க விடப்படும் என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் சுற்றுலாத் தளங்களை மேம்படுத்தும் நடவடிக்கையாக கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் முதல்முறையாக தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில், எட்டாவது சர்வதேச பலூன் திருவிழா 13ஆம் தேதி தொடங்கியது. பொள்ளாச்சி கோவை சாலையில் உள்ள ஆச்சிபட்டி மைதானத்தில் துவங்கிய பலூன் திருவிழாவில் பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாண்ட்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட எட்டு நாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட 12 வெப்ப காற்று பலூன்கள் காற்றில் பறக்க விடப்பட்டன.

3 நாட்கள் நடந்துவந்த இந்த திருவிழாவில் பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட பலூன்கள் வானில் வட்டமடித்தன. வானில் வண்ணவண்ண நிறத்துடன் பறந்த ராட்சத பலூன்களை உள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த அதிகப்படியான சுற்றுலா பயணிகள் கண்டு களித்தனர்.

இறுதி நாளான இன்று சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தமிழ்நாட்டின் வெப்ப காற்று பலூனில் பறந்து சென்று மகிழ்ந்தார். பின்னர் செய்தியாரிடம் பேசிய அமைச்சர், பலூன் திருவிழாவை காண சுற்றுலா பயணிகளின் ஆர்வம் அதிக அளவில் இருக்கிறது. தமிழகத்தில் சுற்றுலா துறையை மேம்படுத்த அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அடுத்த ஆண்டு கண்டிப்பாக அதிகப்படியான பலூன்கள் வானில் பறக்க விடப்படும் என்று தெரிவித்தார். மேலும் அங்கு வந்த சுற்றுலா பயணிகள் வானில் வட்டமடித்த பலூன்களை கண்டு மகிழ்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து சுற்றுலாப்பயணி ஒருவர் கூறுகையில், “இதுபோன்ற பலூன் திருவிழா வெளிநாடுகளில் தான் நடைபெறும். தமிழ்நாட்டில் பலூன் திருவிழா நடைபெறுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ராட்சச பலூன்களில் வெப்பக் காற்றை நிரப்புவது, ஒரே நேரத்தில் பலவகையான வண்ணங்களில் பலூன்களை வானில் காண்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று கூறினார்.

மற்றொருவர் சுற்றுலாப்பயணி கூறுகையில், “ பலூன் திருவிழாவை பார்க்கவே நாங்கள் இங்கு வந்தோம். குழந்தைகள் டயனோசர் ராட்சத பலூன்களை கண்டு நன்றாக கொண்டாடினர். மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது” என்று தெரிவித்தார்.