தமிழ்நாடு

ஆந்திராவில் கைதான 84 தமிழகர்களும் விடுதலை!

webteam

ஆந்திராவில் செம்மரம் வெட்ட வந்ததாகக் கைது செய்யப்பட்ட 84 தமிழர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து செம்மரம் வெட்ட ஏராளமானோர் ஒரே லாரியில் புறப்பட்டு வருவதாக ஆந்திர மாநிலம் செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவினர், சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீனிவாசபுரம் அடுத்த ஆஞ்சநேயபுரம் சோதனைச்சாவடியில் வனத்துறையினரோடு சேர்ந்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த லாரியில் 84 தமிழர்களையும், செம்மரம் வெட்ட வந்தவர்கள் எனக்கூறிய கைது செய்தனர்.

ஆனால் தாங்கள் செம்மரம் வெட்ட வரவில்லை என்றும், சமையல் வேலைக்காக ஆந்திரா வந்ததாகவும் கைதான தமிழர்கள் தெரிவித்துள்ளனர். தாங்கள் இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருப்பதாகவும், முதுகலை பட்டப்படிப்பு படித்து வருவதாகவும் கைதானவர்களில் ஒருசிலர் கூறியுள்ளனர். இந்நிலையில் கைதான 84 தமிழர்களும் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களை நிபந்தனையுடன் விடுவித்து ரேணிகுண்டா வட்டாட்சியர் நரசிம்மலு நாயுடு உத்தரவிட்டுள்ளார். அத்துடன் செம்மரங்கள் வெட்ட வனப்பகுதிகளுக்குள் வரமாட்டோம் என 84 பேரிடமும் கையெழுத்து பெற்றபின் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.