புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே 100 நாள் வேலைத்திட்டத்தின் போது சாலை வரத்து வாரி விடும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களால் கண்டெடுக்கப்பட்ட உலோகத்திலான தங்கம் போன்ற ஆபரணத்தை ஊராட்சி தலைவர் முன்னிலையில் வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர். அது தங்கத்தாலான உலோகம் தானா என்ற சந்தேகம் நிலவுவதால் அந்த அணிகலனை பெற்றுக்கொண்ட கோட்டாட்சியர், அதனை மாவட்ட அருங்காட்சியக காப்பாட்சியரிடம் ஒப்படைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கல்லாலங்குடி ஊராட்சியில் உள்ள காட்டுபட்டியில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு சாலை ஓரத்தில் வரத்து வாரியை வெட்டும் பணியில் ஈடுபட்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் அங்கு பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கே 10 தங்க மாங்கல்யம் மற்றும் ஐம்பதிற்கும் மேற்பட்ட கொண்டு மணிகள் கோர்க்கப்பட்ட சுமார் 80 கிராம் எடையிலான உலோக ஆபரணம் கிடைத்துள்ளது. இது தங்கத்தாலான ஆபரணம் என அந்த பெண்கள் நினைத்து இதனை சம்பந்தப்பட்ட ஊராட்சி தலைவர் மலர் பழனிச்சாமியிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில், அங்கு கிடைத்த அந்த அணிகலனை இன்று அந்த ஊராட்சி தலைவர் மலர் பழனிச்சாமி தலைமையிலான ஊராட்சி நிர்வாகத்தினர், ஆலங்குடி வட்டாட்சியர் செந்தில்நாயகியிடம் ஒப்படைத்தனர். இதனை பெற்றுக்கொண்ட நாயகி அந்த மாங்கல்யம் மற்றும் குண்டுமணி போன்ற ஆபரண அணிகலனை புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் உள்ள காப்பாட்சியரிடம் ஒப்படைக்க உள்ளதாகவும், அங்கு இதற்கென உள்ள ஆய்வாளர்கள் இது தங்கத்தாலான அணிகலனா அல்லது செம்பு அல்லது வேறு உலோகத்தாலான அணிகலனா? என்பது குறித்து ஆய்வுசெய்து அரசுக்கு தெரிவிப்பார்கள் என்றும் வட்டாட்சியர் செந்தில்நாயகி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே 100 நாள் வேலை திட்ட பணியின்போது அங்கு பணிபுரிந்த பெண்கள் கண்டெடுத்த தங்கம் போன்ற அணிகலனை ஊராட்சி தலைவர் மூலம் முறையாக வட்டாட்சியரிடம் ஒப்படைத்த நிகழ்வு வரவேற்ப்பை பெற்றுள்ளது.