தமிழ்நாடு

மயக்க ஸ்பிரே அடித்து பாட்டியை கொலை செய்த கொள்ளுப் பேரன்

மயக்க ஸ்பிரே அடித்து பாட்டியை கொலை செய்த கொள்ளுப் பேரன்

webteam

மயக்க ஸ்பிரே அடித்து பாட்டியையே கொலை செய்ததாக கொள்ளுப் பேரன் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் வேலூரில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் கொல்லமங்கலத்தைச் சேர்ந்த ராஜம்மாளுக்கு வயது 80. கணவரை இழந்த இவர், அப்பகுதியில் தனியே வசித்து வந்தார். இந்நிலையில் அதிகாலை வேளையில் இவரது வீட்டில் அலறல் சத்தம் கேட்டு பதற்றமடைந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் ஓடிவந்து பார்த்தபோது, கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. கதவை உடைத்துப் பார்த்தபோது, உள்ளே இருந்து ஒருவர் வெளியே தப்பியோடினார். வாயில் ரத்தம் வழிந்த நிலையில், ராஜம்மாள் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், வீட்டிற்குள் அவரின் கொள்ளுப்பேரன் மோனிஷ், நண்பருடன் இருந்ததைக் கண்டு குழப்பமடைந்தனர். 

என்ன நடந்தது என விசாரித்தபோது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாண தகவல்களை அளித்துள்ளனர். இதையடுத்து காவல் துறையினர் நடத்திய விசாரைணயில் கொள்ளுப்பேரனாலேயே மூதாட்டி ராஜம்மாளுக்கு நேர்ந்த கொடூரம் அம்பலமானது. பெங்களூருவில் வசித்து வந்த மோனிஷுக்கு அவசரமாக பணம் தேவைப்பட்டுள்ளது. கொள்ளுப் பாட்டி ராஜம்மாள், வீட்டில் பணம் சேர்த்து வைத்திருப்பதை அறிந்த மோனிஷ், நண்பர்களுடன் அங்கு சென்றுள்ளார். 

ராஜம்மாளின் முகத்தில் மயக்க மருந்து தெளித்து பணத்தை கொள்ளையடிப்பது தான் அவர்களின் திட்டம். அதனை செய்ய முற்பட்டபோது ராஜம்‌மாள் கூச்சலிட்டதால் பதற்றமடைந்த மோனிஷ், தனது கொள்ளுப்பாட்டி என்றும் பாராமல் அடித்துக் கொலை செய்துவிட்டார் எனக்கூறுகிறது காவல்துறை. அதற்கு சாட்சியாக அவர்களிடம் இருந்து ஒரு கத்தி மற்றும் மயக்க ஸ்பிரேவும், மூதாட்டி அணிந்திருந்த கம்மல் மற்றும் தங்கச் சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பெங்களூருவை சேர்ந்த மோனிஷ், அவரின் நண்பர் பிரிஷ்வால் ஆகியோரை கைது செய்திருக்கும் காவல்துறையினர், தப்பியோடிய வினய் என்பவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.