தமிழ்நாடு

திருவாரூர் தேர்தல் : 80 வழக்குகள் பதிவு

திருவாரூர் தேர்தல் : 80 வழக்குகள் பதிவு

webteam

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட திருவாரூரில் விதிகளை மீறியதாக கூறி திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மீது இதுவரை 80 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இதனால் அவர் பதவி வகித்து வந்த திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. எனவே இடைத்தேர்தல் பிப்ரவரி 7 ஆம் தேதிக்குள் நடைபெறும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், ஜனவரி 28-ஆம் தேதி திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என கடந்த 31ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. மேலும் தேர்தலில் முறைகேடுகளை  தடுக்க போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். 


இந்நிலையில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட திருவாரூரில் விதிகளை மீறியதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. திருவாரூரில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில், விதிகளை மீறியதாக இதுவரை 80 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் அதிமுக, திமுக, அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. விதிகளை மீறி சுவர் விளம்பரம் செய்தது உள்ளிட்ட பல்வேறு புகார்களில் திருவாரூர் காவல்துறையினர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.