தமிழ்நாடு

சாலையில் கிடந்த 8 சவரன் நகை: மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர்கள்

சாலையில் கிடந்த 8 சவரன் நகை: மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர்கள்

webteam

வத்தலக்குண்டு அருகே சாலையில் கிடந்த 8 சவரன் தங்க நகை மற்றும் பணத்தை மீட்ட தூய்மை பணியாளர்கள், அதை உரியவரிடம் ஒப்படைத்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே சித்தரேவு ஊராட்சி பேருந்து நிறுத்தம் பகுதியில் தூய்மை பணியாளர்களான ஜோதி, பஞ்சுபாண்டி ஆகிய இருவரும் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாலையில் மணி பர்ஸ் ஒன்று கிடப்பதைக் கண்டு அதை எடுத்து பிரித்துப் பார்த்துள்ளனர். அப்போது அதில், தங்க நகை மற்றும் பணம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக அதை ஊராட்சி அலுவலகத்திற்கு கொண்டு வந்து ஊராட்சி செயலரிடம் ஒப்படைத்தனர்.

இது குறித்து பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், நெல்லூர் பகுதியைச் சேர்ந்த அமராவதி என்பவர் கட்டை பையில் வைத்து எடுத்துவரப்பட்ட நகை மற்றும் பணத்தை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்திருந்த 8 சவரன் தங்க நகை மற்றும் ரூபாய் 40 ஆயிரம் பணத்தை மீட்ட போலீசார், விசாரணைக்கு பின் உரியவரிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து சாலை கிடந்த தங்க நகை மற்றும் பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைக்க உதவிய தூய்மை பணியாளர்களை போலீசார் பாராட்டினர்.