தமிழ்நாடு

நாம் தமிழர், ஆதித்தமிழர் கட்சியினர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட வழக்கில் 8 பேர் கைது

நாம் தமிழர், ஆதித்தமிழர் கட்சியினர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட வழக்கில் 8 பேர் கைது

webteam

நாம் தமிழர் ஆதித்தமிழர் கட்சியினர் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக் கொண்ட சம்பவம் தொடர்பாக இருதரப்பைச் சேர்ந்த 8 பேரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அருந்ததியர்கள் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறாக பேசியதை கண்டித்து போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தை ஆதித்தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது போலீசாருக்கும் ஆதித்தமிழர் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து போலீசாரின் தடுப்பை மீறி ஆதித்தமிழர் கட்சியினர் நாம் தமிழர் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட சென்றனர். இதனால் இரு தரப்பினரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் கற்கள், கட்டைகள், பாட்டில்கள், உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர் இதில் இரு கட்சியினருக்கும் ரத்தக்காயம் ஏற்பட்டது.

இச்சம்பவம் குறித்து இரு கட்சியைச் சேர்ந்த 35 பேர் மீது போரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் ராமச்சந்திரன், தலைமை நிலைய பொறுப்பாளர் வசந்தன், உறுப்பினர்கள் அல்லி முத்து, சதீஷ்குமார் ஆகியோரும், ஆதித்தமிழர் கட்சியைச் சேர்ந்த விருதுநகர் மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், செயலாளர் வேல்முருகன், திருநெல்வேலி ராமமூர்த்தி தூத்துக்குடி மாவட்ட துணை அமைப்பாளர் முத்துசாமி ஆகிய எட்டு பேர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.