ஆம்ஸ்ட்ராங் படுகொலை| 8 பேர் சரண் puthiya thalaimurai
தமிழ்நாடு

ஆம்ஸ்ட்ராங் படுகொலை | 8 பேர் சரண்!

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக ஆற்காடு பாலு உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்பகை காரணமாக கொலை நடந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

PT WEB

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். பெரம்பூர் வேணுகோபால் சாமி தெருவில் இவருக்கு பழைய வீடொன்று இருந்துள்ளது. அதை இடித்து கட்டுமான பணி மேற்கொண்டு வந்திருக்கிறார். தினமும் அந்த பணிகளை பார்வையிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அப்படி நேற்று இரவும் கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தின் அருகே நின்று, தனது நண்பர்களுடன் ஆம்ஸ்ட்ராங் பேசிக்கொண்டிருந்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங்

அப்போது திடீரென இருசக்கர வாகனங்களில் வந்த 8 பேர் கொண்ட கும்பல், ஆம்ஸ்ட்ராங்கை சரமாரியாக வெட்டியது. தடுக்க வந்த அவரது நண்பர்கள் வீரமணி, பாலாஜி ஆகியோருக்கும் முதுகு, காது மற்றும் காலில் வெட்டு விழுந்தது. கொலையாளிகள் தப்பியோடும் காட்சிகள், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளன.

ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த ஆம்ஸ்ட்ராங்கை சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் உறவினர்கள் அனுமதித்தனர். தகவலறிந்து இயக்குநர் பா.ரஞ்சித், நடிகர் தீனா ஆகியோரும் மருத்துவமனைக்கு சென்றனர். அப்போது பா.ரஞ்சித் தேம்பி தேம்பி அழுதார்.

அடுத்த சில மணி நேரத்திலேயே, மருத்துவமனையில் ஆம்ஸ்ட்ராங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், அவரது உடல் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது.

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் சொல்லப்பட்டவை:

ஆம்ஸ்ட்ராங் வீட்டிற்கு அருகே உணவகம் உள்ளதால், டெலிவரி ஊழியர்கள் அடிக்கடி நிற்பது பழக்கம். அதை பயன்படுத்தி, உணவு டெலிவரி ஊழியர்கள் போல மாறுவேடத்தில் வந்து ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்துள்ளனர்.

தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திலிருந்து கொலையாளிகள் விட்டுச் சென்ற இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் கத்தி, அரிவாள் ஆகியவற்றை கைப்பற்றினர்.

10 தனிப்படைகள் அமைப்பு

கொலையாளிகளை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், ஆற்காடு பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

கொலைக்காரணம் என்ன?

ஆம்ஸ்ட்ராங் படுகொலை | 8 பேர் சரண்

கடந்த ஆண்டு ஆற்காடு சுரேஷ், பட்டினம்பாக்கத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதில் ஆம்ஸ்ட்ராங்கிற்கு தொடர்பு இருப்பதாகவும், அதனால் ஏற்பட்ட முன்பகை காரணமாக கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதை கண்டித்து சென்னையின் பல்வேறு இடங்கள் மற்றும் திருவள்ளூர், சேலம், ஆம்பூரில் அவரது ஆதரவாளர்கள் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங் வீட்டின் அருகே காவலர்கள் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.