திமுக pt web
தமிழ்நாடு

”மதவாத எதிர்ப்பு, மாநில உரிமை”-பவளவிழா கொண்டாடும் திமுக..75 ஆண்டுகள் களமாடி வேரூன்றி நிற்கும் பயணம்!

பகுத்தறிவு இயக்கமாக ஊற்றெடுத்து, சமூக நீதி என்ற கொள்கையுடன் தேர்தல் அரசியலில் 75 ஆண்டுகாலமாக களமாடி வேரூன்றி நிற்கும் திராவிட முன்னேற்றக் கழகம் அதன் பவளவிழாவை கொண்டாடுகிறது. அதன் பெரும் பயணத்தை சிறு தொகுப்பாக பார்க்கலாம்...

PT WEB

திமுக பவளவிழா

25 ஆண்டுகாலம் ஆளும் கட்சி.. 35 ஆண்டுகாலம் எதிர்க்கட்சி என திமுகவின் பயணம் நீண்டது... வலுவானது...நீதிக்கட்சி... சுயமரியாதை இயக்கம்... திராவிடர் கழகம் ஆகியவற்றை முன்னோடிகளாகக் கொண்டு தொடங்கப்பட்ட இயக்கம். 1949-ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ல் பெரியாரின் பிறந்தநாள் அன்று தொடங்கப்பட்டது திமுக. ஆதிக்க சமுதாயங்களுக்கு எதிரான போராட்டம்... மதவாத எதிர்ப்பு, மாநில உரிமை என திமுக முன்னெடுத்த போராட்டங்கள் பற்பல... அவை பெருவாரியான மக்களை வெகுவாகக் கவர்ந்தது. சமூகநீதி முழக்கம் வெகுமக்களின் குரலாக ஒலித்தது.

தனி நாடு தொடங்கி தனிமாநில உரிமை கோரல் என முன்வைத்த கோரிக்கைகள் தேசிய அரசியலை அதிரச் செய்தவை. தமிழ்நாட்டின் சமூக அரசியல், பண்பாட்டு வளர்ச்சி, பொருளாதார போக்கு ஆகியவற்றை தீர்மானிக்கும் சக்தியாக திமுக இன்றளவும் உள்ளது. அண்ணா, கருணாநிதி ஆகியோர் திமுவின் தனிப்பெரும் தலைவர்கள். பகுத்தறிவை பரப்பும் கலை இலக்கிய படைப்புகள் மூலம் சீரிய சிந்தனைகளை தமிழ்ச்சமூகத்தில் விதைத்ததில் இருவரின் பங்கும் அலாதியானது.

திமுக பக்கம் நின்ற இளைஞர் படை

பெரியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகத்தான் திமுகவை அண்ணா தொடங்கினார் என்றாலும், பெரியாரின் கொள்கைகளே திமுகவின் அடிநாதமாக இருந்தது. மேடைப் பேச்சில் வல்லவர்களான கருணாநிதியும், நெடுஞ்செழியனும் துணை நின்றதால் அன்றைய காலகட்டத்தில் பெருந்திரளான இளைஞர் படை திமுக பக்கம் நின்றது. எழுத்து, பத்திரிகை, இசை, நாடகம் என பல்வேறு கலை- இலக்கியங்கள் வாயிலாக திமுக கொள்கை பரப்பியது. பின்னாளில் திரைப்படங்கள் திமுகவை, அதன் கொள்கைகளை மக்களிடம் கொண்டுசேர்த்தது. திமுகவின் கொள்கைகள் விளக்கும் வசனங்கள் மக்களுக்கு மனப்பாடமாயின.

1957-ஆம் ஆண்டு தேர்தல் அரசியல் களத்தில் இறங்கியது திமுக. இந்தி எதிர்ப்புப் போராட்டங்களால், காங்கிரஸ் ஆதிக்கத்தின் வீரியத்தை படிப்படியாக வலுவிழக்கக் செய்தது. 1967-ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் பெரும் வெற்றியை ஈட்டி ஆட்சி அரியணை ஏறியது. மொழியுணர்வுக்கு புத்துயிரூட்டும் வகையில், மாநிலத்தின் பெயர் தமிழ்நாடு என மாற்றப்பட்டது.

திமுக கொள்கைகளை திரைப்படங்கள் வாயிலாக பரப்பியதில் பெரும்பங்காற்றிய எம்,ஜி.ஆர், கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக புதிதாகக் கட்சியை தொடங்க விரும்பினார். அனகாபுத்தூர் ராமலிங்கம் என்பவரால் பதிவு செய்யப்பட்டிருந்த அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தில் 1971- ஆம் ஆண்டு தம்மை இணைத்துக் கொண்டார். 1977-ஆம் ஆண்டு அந்தக்கட்சி ஆட்சியை பிடித்தது. இதன்பின்னர் 1987-வரை, அதாவது எம்.ஜி. ஆர். மறைவு வரை திமுகவால் ஆட்சி அரியணையை நினைத்துக் கூட பார்க்க முடியாத நிலை இருந்தது.

ஆனாலும் திமுக அதன் தொண்டர் பலத்தை இழக்கவில்லை. அண்ணாதுரை மறைவுக்கு பின் தமிழ்நாட்டில் 5 முறை முதலமைச்சர் பதவியை வகித்திருக்கிறார் கருணாநிதி. போட்டியிட்ட பேரவைத் தேர்தல்கள் 13- லும் வெற்றி கண்ட பெருமைக்குரியவர் கருணாநிதி. கருணாநிதியின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு 2017- தொடக்கத்தில் திமுவின் செயல் தலைவராக ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

முக்கால் நூற்றாண்டு பழமை வாய்ந்த திமுக அதன் பவளவிழாவை தங்கள் ஆட்சிக் காலத்திலேயே கொண்டாடுகிறது. திராவிட மரத்தின் மற்றொரு பெரும் கிளையும், அரை நூற்றாண்டு வரலாறு கொண்ட அரசியல் சக்தியுமான அதிமுக, எதிர்க்கட்சியாக அதனை கண்டு கொண்டிருக்கிறது.