கோவை பிச்சனூர் அருகே வாட்டர் ஹீட்டரை தொட்டுப்பிடித்த 7 வயது சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கே.ஜி.சாவடி அடுத்த பிச்சனூர் பகுதியை சேர்ந்தவர் ராமன். இவரது மனைவி பேபி. இந்தத் தம்பதிக்கு 7 வயதில் கிருத்திக் என்ற மகன் இருந்தான். ராமன் கடந்த 3 மாதங்களுக்கு முன் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து மகன் கிருத்திக்குடன், பேபி தனது தாய் வீட்டில் தங்கி பிச்சனூர் அரசுப் பள்ளியில் மகனை 3-ம் வகுப்பு படிக்க வைத்து வந்தார்.
இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் பாட்டி ராமாத்தாள் வீட்டில் குளிப்பதற்காக தண்ணீர் சூடு செய்ய மினி எலக்ட்ரிக் வாட்டர் ஹீட்டர் கருவியை பயன்படுத்தியதாக தெரிகிறது. அப்போது வாட்டர் ஹீட்டர் அருகே கிருத்திக் அமர்ந்திருந்ததாக தெரிகிறது. இதனிடையே ராமாத்தாள் வீட்டிற்கு வெளியே சென்று விட்டு மீண்டும் உள்ளே வந்த போது வாட்டர் ஹீட்டரை பிடித்தவாறு மின்சாரம் பாய்ந்து சிறுவன் கிருத்திக் மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.
இதனைக் கண்ட ராமாத்தாள் அங்கிருந்தவர்கள் உதவியுடன் சிறுவனை மீட்டு திருமலையாம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றார். ஆனால் அங்கு அவரை பரிசோதனைச் செய்த மருத்துவர்கள் சிறுவனின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் மேல் சிகிச்சைக்காக மதுக்கரை அரசு மருத்துவமனைக்கு கிருத்திக்கை அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக சிறுவனின் தாய் பேபி கொடுத்த புகாரின் அடிப்படையில், கே.ஜி.சாவடி போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவர் ராமன் இறந்து 3 மாதங்கள் ஆன நிலையில், மகனும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததால் தாய் பேபி பரிதவிக்கும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.